மேல்முறையீட்டில் ஓபிஎஸ்க்கு சான்ஸ் இருக்கா? மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சொன்ன பாயிண்ட்
சென்னை: ஒரு உத்தரவை ரிவர்ஸ் செய்து கொடுப்பது என்பது முழு வழக்கையும் கேட்டு தீர்மானித்து செய்ய வேண்டும். அது நாளையோ நாளை மறுநாளோ நடக்கப்போவது இல்லை. மே மாதம் நீதிமன்றத்திற்கு விடுமுறை. அதற்கு முன்பாக நடக்க வாய்ப்பு இல்லை என்று அதிமுக வழக்கு தொடர்பாக பேசிய மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஓபிஎஸ் தரப்பு இடையீட்டு மனு
இதையடுத்து பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த போதே பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டது. எனவே, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை கேட்டு இடையீட்டு மனுவை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி
இதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றம் டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

100 க்கு 98 சதவீதம்
இதனால், அதிமுக விவகாரத்தில் சட்ட போராட்டங்கள் இன்னும் முடியவில்லை என்ற பேச்சும் எழுந்துள்ளது. இந்த நிலையில், அதிமுக வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி,100 க்கு 98 சதவீதம் இந்த தீர்ப்பை ரிவர்ஸ் செய்ய சட்ட ரீதியாக வாய்ப்பு இல்லை என தான் கருதுவதாக கூறினார். இது தொடர்பாக தமிழ்மணி கூறியதாவது

இறைவனை தவிர வேறு யாரும்
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் அவரை இறைவனை தவிர வேறு யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது. இதை சட்ட ரீதியாக சொல்கிறேன். இடைக்கால உத்தரவு கொடுத்து விட முடியும். ஆனால், ஒரு உத்தரவை ரிவர்ஸ் செய்து கொடுப்பது என்பது முழு வழக்கையும் கேட்டு தீர்மானித்து செய்ய வேண்டும். அது நாளையோ நாளை மறுநாளோ நடக்கப்போவது இல்லை.

சட்டரீதியாக வாய்ப்பு இல்லை
மே மாதம் நீதிமன்றத்திற்கு விடுமுறை. அதற்கு முன்பாக நடக்க வாய்ப்பு இல்லை. ஜூன் மாதத்தில் மேல் முறையீட்டை கேட்கலாம். அவர்களும் 100 க்கு 98 சதவீதம் இந்த தீர்ப்பை ரிவர்ஸ் செய்ய சட்ட ரீதியாக வாய்ப்பு இல்லை. உச்ச நீதிமன்றமும் சொல்ல வழியில்லை என்பதை நான் தீர்மானமாக கருதுகிறேன். எனெனில் சட்டம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது. 8 மாதமாக அவர்கள் கட்சியில் இல்லை. தூங்கி எழுந்து வந்து எதோ சொல்ல முடியாது.

தேர்தல் ஆணையத்தின் முடிவு தான்..
நீதிமன்றங்களின் முடிவுகள் தேர்தல் ஆணையத்தை 100 சதவீதம் கட்டுப்படுத்தும். தேர்தல் ஆணையத்தின் முடிவுதான் இறுதி முடிவு என்றால் மகாராஷ்டிராவில் நீதிமன்றம் போக வேண்டிய அவசியம் என்ன.. நீதிமன்றம் அதை விசாரிக்க வேண்டிய தேவை என்ன.. எனவே யாராவது தேர்தல் ஆணையம் இறுதி என்று சொன்னால் அவர்கள் புரிதல் தவறு. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications