ஓபிஎஸ்க்கு அதிமுகவில் இடமே இல்லை! விடாப்பிடியாக நிற்கும் எடப்பாடி! நேற்றே சொன்ன "ஒன்இந்தியா தமிழ்!"
சென்னை: அதிமுகவில் மீண்டும் சேர தான் தயாராக இருப்பதாகவும், தன்னை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறாரா? என பேசி இருந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதே நேரத்தில் ஓபிஎஸ்ஐ அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை எனவும், அதிமுக பொதுக்குழு தான் ஓபிஎஸ்-ஐ நீக்க முடிவு எடுத்தது என கூறி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கூட்டணியில் வேண்டுமானால் ஓ.பன்னீர் செல்வத்தை சேர்த்துக் கொள்வார் எடப்பாடி, அதிமுகவில் அவருக்கு இடமே இல்லை என நேற்று ஒன் இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டது. தற்போது அதனை உறுதி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், எதிர்கால அரசியல் பயணம், கூட்டணி நிலைப்பாடு, தமிழக அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அதிமுக
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்பது, பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகளை மீண்டும் ஒன்றிணைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது" என தெரிவித்தார். அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே தனது முதன்மை நோக்கம் என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் இணைப்பு
மேலும், "எடப்பாடி பழனிச்சாமி எனது அருமை அண்ணன். தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் அதிமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. டிடிவி தினகரனும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று சொல்கிறார்; நானும் அதையே வலியுறுத்துகிறேன். இந்நிலையில், அதை நடைமுறைப்படுத்த வேண்டியது எடப்பாடி பழனிச்சாமியின் கையில்தான் உள்ளது" என ஓபிஎஸ் பேசியிருந்தார். அதோடு, "நான் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு முழுமையாக தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தயாரா?" என அவர் எழுப்பிய கேள்வி அதிமுக வட்டாரங்கள் பெரும் கவனத்தை ஈர்த்தது.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தீர்க்கமான ஒரு முடிவை சொல்லி இருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மீண்டும் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி," அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை எனவும், எப்போதும் அதிமுகவில் ஓபிஎஸ் இணைக்கப்பட மாட்டார்" என உறுதியாக கூறியிருக்கிறார்.
அதிமுக பாஜக
இந்த நிலையில் பாஜக ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி இடம் பேச்சு நடத்தியதையும், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில் வேண்டுமானால் ஓபிஎஸ் சேர்ந்து கொள்ளட்டும், மூன்று சட்டமன்ற தொகுதிகள் தருகிறோம், ஆனால் அதிமுகவில் அவர் சேர வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாக நேற்று ஒன் இந்தியா தமிழ் கட்டுரையாக வெளியிட்டிருந்தது. தற்போது அதனை உறுதி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் நேரத்தில் இது போன்ற நம்பகமான அரசியல் செய்திகளுக்கு ஒன் இந்திய தமிழுடன் இணைந்திருங்கள்.












Click it and Unblock the Notifications