மதுரை ED அதிகாரி விவகாரம் சிபிஐக்கு மாற்றம்? வெளியான பரபர தகவலுக்கு! லஞ்ச ஒழிப்பு துறை பதில்
சென்னை: அமலாக்கத் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் திட்டம் உள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு.. அவர் மீது ஏற்கனவே அமலாக்கத் துறை வழக்கு இருந்ததாகவும் இருப்பினும், அந்த வழக்கு முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். மீண்டும் வழக்கை எடுத்து நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என மிரட்டியுள்ளார்.
அமலாக்க துறை கைது: குறிப்பாகப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அந்த வழக்கை விசாரிக்குமாறு உத்தரவு வந்துள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளார். இதனால் சுரேஷ் பாபு அஞ்சிய நிலையில், திடீரென டோனை மாற்றிய அங்கித் திவாரி வழக்கை முடிக்க 3 கோடி ரூபாய் கேட்டுள்ளார். டாக்டர் சுரேஷ் பாபு இதற்கு ஒத்துக்கொள்ளாத நிலையில், மீண்டும் தொடர்பு அங்கித் திவாரி, உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் 51 லட்ச ரூபாய் லஞ்சம் தந்தால் போதும் என கேட்டுள்ளார்.
அமலாக்கத் துறை அதிகாரியின் மிரட்டலுக்கு அஞ்சிய டாக்டர் சுரேஷ் பாபு முதலில் ரூ 20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். அதன் பின்னரும் மீத தொகை 31 லட்சத்தை லஞ்சமாகத் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். வாட்ஸ்அப் மூலமாகவும் போன் செய்தும் அவர் மிரட்டியுள்ளார். தனது சூழலை உணர்ந்த சுரேஷ் பாபு இது தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
விசாரணை: விஜிலென்ஸ் அளித்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 31 லட்சத்தை அங்கித் திவாரியிடம் டாக்டர் சுரேஷ் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு தப்ப முயன்ற அங்கித் திவாரியை அங்கிருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் விரட்டிச் சென்று பிடித்தனர். சுமார் 15 கிமீ மேல் விரட்டி சென்று அங்கித் திவாரியைப் பிடித்துள்ளனர். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், அமலாக்கத் துறை மதுரை அலுவலகத்திலும் விடிய விடியச் சோதனை நடத்தினர்.
இதனால் பல மணி நேரம் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிபிஐக்கு மாற்றும் திட்டம்? மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஊழல் செய்தால் அவரை விசாரிக்க இருக்கும் அமைப்பு தான் சிபிஐ.. எனவே, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கக் கூடும் என்று தகவல் வெளியானது. மாநில அரசு விரும்பினால் மட்டுமே இந்த வழக்கை மாற்ற முடியும். இதற்கான அதிகாரம் தமிழக அரசிடமே உள்ளது. இதற்கிடையே அந்த தகவலை லஞ்ச ஒழிப்புத் துறை முற்றிலுமாக மறுத்துள்ளது. அமலாக்கத் துறை கைது அதிகாரி கைதான வழக்கை சிபிஐக்கு மாற்றும் திட்டம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியின் சக ஊழியர்களிடமும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதை சிபிஐக்கு மாற்றும் திட்டம் இல்லை என்றும் முழுக்க முழுக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளே விசாரிப்பார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், சிபிஐ உட்பட எந்தவொரு மத்திய விசாரணை அமைப்புகளுக்குக் கொடுக்கும் திட்டமில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய மற்றவர்களிடம் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக அவர் வாங்கிய பணத்தை மற்ற அதிகாரிகளிடம் பிரித்துக் கொடுத்துள்ளாரா என்று கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர். மேலும், அவரது செல்போன் உரையாடல்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications