காவிரி ஆற்றங்கரையோரம் டாஸ்மாக் கடையா?.. திடீர் மனு.. உயர் நீதிமன்றத்தில் அரசு சொன்ன பரபர பதில்
சென்னை: ஈரோட்டில் கிராமத்திற்கு வெளியில் உள்ள மதுபானக் கடையை காவிரி ஆற்றங்கரையோரம் மாற்றியமைக்கும் திட்டம் ஏதும் இல்லை என டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்ததும் பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வந்தன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி, கோயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றின் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதேபோல, மக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தாலும் அந்த டாஸ்மாக் கடைகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள லக்கனாபுரத்தை சேர்ந்த எம்.சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "லக்கனாபுரம் கிராமத்திற்கு தொலைவில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை, கொக்கராயன்பேட்டை - லக்கனாபுரம் சாலையில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம் அருகே மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அப்பகுதியில் படகுத்துறை, மகளிர் குளிக்கும் இடம் ஆகியவை உள்ளதால் காவிரி ஆற்றுப்பாலம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடையை அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவானது, பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஈரோட்டில் உள்ள குறிப்பிட்ட கடையை காவிரி ஆற்றங்கரையோரம் மாற்றி அமைக்கும் திட்டம் ஏதும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு இல்லை" எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications