ஜெயலலிதா சேலை இழுப்பு.. சட்டசபையில் நடக்காத சம்பவம்.. நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் கண்டனம்
சென்னை: ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது வாட்ஸ்அப் வரலாற்றில் இருந்து எதையாவது படித்துப் பேசியிருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப் சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடிக்கிறது. பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் லோக்சபாவில் பேசினர். அப்போது மணிப்பூரில் பாரதமாதாவையே பாஜக அரசு படுகொலை செய்துவிட்டது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்பி கனிமொழி பேசினார். மகாபாரத திரெளபதியை போல மணிப்பூரிலும் பெண்கள் துகிலுரியப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டும் யாரும் உதவவில்லை என்று திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக பேசினார். மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாண ஊர்வலமாக நடத்தப்பட்டும் மத்திய அரசு மவுனம் காக்கிறது. அடைக்கலம் கோரிய பெண்களுக்கு மணிப்பூர் போலீஸ் பாதுகாப்பு தராமல் வன்முறை கும்பலிடம் விட்டுவிட்டு போனது. மணிப்பூர் விவகாரத்தில் பெண்கள் ஆணையங்கள் அனைத்தும் அமைதி காக்கின்றன.
மணிப்பூர் நிலவரம் குறித்து இன்னமும் மத்திய அரசு மவுனம் காக்கிறது. மணிப்பூர் மக்களை பிரதமர் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். 3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கனிமொழி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
லோக்சபாவில் கனிமொழி பேசியது அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில் அனைத்திற்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார். திரௌபதி பற்றி பேசியிருக்கிறார்கள்.. ஒரு பெண்ணாக இதை நான் சொல்வதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. திரௌபதியின் புடவை துகிலுரியப்பட்டதைப் பற்றி பேசியிருக்கிறார் திமுக எம்.பி. தமிழ்நாட்டு சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை இழுத்தவர்கள்தான் திமுகவினர் என்று ஆவேசமாக பேசினார் நிர்மலா சீதாராமன்.
1989 மார்ச் 25ஆம் தேதி ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக. அப்போது சட்டசபையில் அவரது புடவை கலைந்து, தலை கலைந்து நின்று கொண்டிருந்த போது அதைப்பார்த்து சிரித்தவர்கள்தான் திமுகவினர். அப்போது ஜெயலலிதா ஒரு சபதம் போட்டார். இனி நான் இந்த சட்டசபைக்கு வர மாட்டேன். அப்படி சட்டசபைக்குள் நுழைந்தால் முதலமைச்சராகத்தான் நுழைவேன் என்று சபதம் போட்ட ஜெயலலிதா தனது சபதத்தில் ஜெயித்தார் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். சட்டசபையில் அன்று ஜெயலலிதாவின் புடவையை இழுத்து துகிலுரித்தவர்கள் இன்றைக்கு திரௌபதியைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக கூறினார்.
இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாதத்தின் போது தனது உரையில், 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தைக் குறிப்பிட்டு, பெண்கள் பாதுகாப்புப் பிரச்சினையில் திமுகவைத் தாக்கினார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாட்ஸ்அப் வரலாற்றில் இருந்து எதையாவது படித்துப் பேசியிருக்க வேண்டும். தமிழக சட்டப் சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அப்போது வீட்டில் இருந்த அனைவருக்கும் தெரியும் அது அவர்களே நடித்த நாடகம் என்று கூறினார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் எபிசோட் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை நன்கு அறிந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு (தற்போது திருச்சி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்) சட்டசபையிலேயே, "ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் முன்பு ஒத்திகை பார்த்தார், அந்த காலகட்டத்தில் நானும் இருந்தேன்" என்று கூறினார். இதனையடுத்து, நாடாளுமன்ற உரையில் தமிழக சட்டசபை நடவடிக்கைகளை திரிபுபடுத்திய நிர்மலா சீதாராமனின் செயல் வருத்தம் அளிக்கிறது மற்றும் தவறாக வழிநடத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications