அமெரிக்காவில் தமிழ் குழந்தை தத்தளிப்பு-'அயலக தமிழர் நல வாரியம்' கார்த்திகேய சிவசேனாபதி நேரில் ஆய்வு!
சென்னை: அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் தம்பதியின் குழந்தையை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியம் நேரடியாக களமிறங்கியது. இது தொடர்பாக ஆய்வு நடத்தவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அயலக தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்காவில் முகாமிட்டு ஆலோசனைகளை நடத்தினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் தாய்தந்தையை இழந்த 2 வயது தமிழ்க் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலவாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் தாய் தந்தையை இழந்த தமிழ்நாட்டை சேர்ந்த குழந்தை (உறவினரல்லாத) அண்டை வீட்டாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அக்குழந்தையின் குடும்ப உறவினர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தை அனுகி குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வர உதவி கோரினார்கள், இதை மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் உடனடியாக அக்குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்கள்.
அதன் ஒரு பகுதியாக அக்குழந்தையின் குடும்ப உறவினர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அயலகத் தமிழர் நல வாரியம் செய்து வருகிறது, இதன் தொடர்ச்சியாக இன்று அமெரிக்காவின் தெற்கு பகுதியில் டெனிசி மாநிலத்தில் உள்ள மெல்பெசட் மாநகரத்தில் உள்ள அக்குழந்தையின் சிற்றன்னையும், பாட்டியும் அந்நகர தமிழ்ச் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் ஆலோசனைப்படியும், அயலகத் தமிழர் நல வாரியத்தின் சார்பாக அமெரிக்க நாட்டின் உறுப்பினர் கால்டுவெல் வேல் நம்பி அவர்களுடன் இணைந்து அக்குடும்பத்தினரை சந்தித்து, அட்லாண்டாவிலிருந்து வந்திருந்த இந்திய நாட்டு தூதரக ராஜு கந்தசாமி மற்றும் மினி நாயர் அவர்களுடன் இணைந்து ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்.

அந்தக் கூட்டத்திலே டல்லாஸ் பகுதி சக்திவேல், சார்லோட்டைச் சார்ந்த ரோகிணி, ராலே பகுதி வட கரோலினா REACTION-Response Emergency Access&Care To Indian Overeas Network Team Inc லாவண்யா, மிட் சவுத் வாசுதேவன், கல்யாண், திருமகள் தியாகராஜன், ரேகா பிள்ளை, கேமெலியோ ஜோன்ஸ், பிரியா நாகராஜ், ராஜி வேல்ராஜன், கே.பி ராமநாதன், விக்னேஸ்வரன் சிவசுப்ரமணியம், சூரியன் பொன்னுசாமி, செந்தில் வி சந்திரன், சங்கர் மஹாலிங்கம் மற்றும் சக்திவேல் ராம் இவர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் கலந்தாய்வு கூட்டத்தில் விவாதித்தோம்.

இதற்கு முன்னதாக நியூயார்க் அமெரிக்க வழக்கறிஞர் நிலா, பாலாஜி ஆகியோருடனும் இப்பிரச்சினையை சட்டப்படி எப்படி அணுகுவது என்று ஆலோசனை கேட்டு, அதன் தொடர்ச்சியாக இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் சேர்ந்து அக்குழந்தையை மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தேவையான சட்ட உதவி, பொருளாதார உதவி செய்வோம் என உறுதியளித்திருக்கிறோம்.
தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் குறிப்பாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் (Fetna) கூட்டமைப்பின் தலைவர் பாலா சாமிநாதன் ஆகியோருக்கும் இக்கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாகவும், அயலகத் தமிழர் நல வாரியம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications