திமுகவின் கோட்டையை தகர்ப்பேன்.. வடசென்னை குப்பை மேடாக உள்ளது... பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் பேட்டி
சென்னை: வடசென்னை திமுகவின் கோட்டை என்கிறார்களே.. உங்களுக்கு எவ்வளவு சவாலாக இருக்கும் என்று கேட்டார் செய்தியாளர்.. அதற்கு பதில் அளித்த பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், பழைய கோட்டைகள் நிறைய இடிந்து விழுவதை பார்த்துவிட்டோம்.. அதேபோல இந்த கோட்டையும் தகர்க்கப்பட கூடிய கோட்டை தான் என்றார்.
வட சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவரிடம் செய்தியாளர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகளையும் அதற்கு பால் கனகராஜ் அளித்த பதிலையும் பார்க்கலாம்.

செய்தியாளர்: பலபேர் இந்த தொகுதியில் போட்டியிட ஆசைப்பட்டிருப்பார்கள்.. உங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வட சென்னை தொகுதியை கொடுத்துள்ளார்கள். இது எப்படி கிடைத்தது என்று நினைக்கிறீங்க? என்று கேட்டார்.
பால்கனகராஜ்: அதற்கு பால்கனகராஜ் பதில் அளிக்கையில், வட சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக நிற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக கருதுகிறேன். 18 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ள கட்சி பாஜக.. இந்த 18 கோடி பேரில் என்னை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் என்பதே பெருமையான விஷயம்.. அவர்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக நான் பூர்த்தி செய்வேன்.. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எம்பிக்களாகி, அமைச்சர்களாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை நான் நிச்சயமாக பூர்த்தி செய்வேன் என்றார்.
செய்தியாளர்: பொதுவாக வட சென்னை திமுகவின் கோட்டை என்பார்கள். இங்கு 11 முறை திமுக வென்றுள்ளது. அதிமுகவே இங்கு ஒருமுறை தான் ஜெயித்துள்ளது.. உங்களுக்கு இந்த தேர்தல் களம் எவ்வளவு சவாலாக உள்ளது சார் என்று கேட்டார்.
பால்கனகராஜ்: அதற்கு பால்கனகராஜ் பதில் அளிக்கையில், "இந்த கோட்டை என்பது பழைய கோட்டை சார்... காலம் செல்ல செல்ல பழைய கோட்டைகள் இடிந்து விழுவதை பார்த்திருப்போம்.. அந்த வகையில் இந்த கோட்டையும் தகர்க்கப்பட கூடிய கோட்டை தான்.. அப்படியே நிலையாக நிற்கக்கூடிய கோட்டை எல்லாம் கிடையாது.. அந்த கோட்டையில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது.
11 முறை நின்றுள்ளார்கள் என்று நீங்களே சொல்றீங்க.. 11 தடவை தேர்ந்தெடுக்கப்பட்டும் வடசென்னை, வடசென்னையாகவே இருக்கிறது. நவீன வடசென்னையாக மாறவில்லை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை மேம்படவில்லை.. அவர்கள் தாய், தந்தை, மூதாதையர்கள் வாழ்ந்தார்களோ, அதேநிலையில் தான் அந்த குடும்பத்தினர் வாழ்கிறார்கள். இது தான் எதார்த்தமான களநிலவரம். வடசென்னையை பொறுத்தவரை ஏழைகள் மிக அதிகமாக உள்ளார்கள். அதற்கும் கீழ் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.. நடுத்தர குடும்பங்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள்.. கொஞ்சம் உயரதர, நடுத்தர வகுப்பும் இருக்கிறார்கள்..
ஆனால் இவர்கள் யாரும் சுகாதாரமான வாழ்க்கை சூழலில் வடசென்னையில் இல்லை. புயல் மழைக்காலங்களில் பாதுகாப்பு இல்லை. சாலைகளுமே குண்டு குழியுமாக தரமற்ற வகையில் இருக்கிறது. அழுக்கு, குப்பை மேடாக வடசென்னையை வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், திமுக, அதிமுக இருவருமே மாற்றவில்லை.. வடசென்னையை மேம்படுத்த எந்தவிதமான திட்டங்களும் வகுக்கப்படவில்லை. தானாக வளர்ந்த பகுதி தான் வடசென்னை,. எங்காவது இடம் கிடைக்கவிட்டால் இங்கு வரலாம் என்ற நிலை இருக்கிறது. அதுவும் லாபம் இவர்களுக்கு கிடைக்கும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான் அமல்படுத்தப்பட்டது" என்றார்.
செய்தியாளர்: சார் உங்களுக்கு வடசென்னை எப்படி சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.
பால்கனகராஜ்: அதற்கு பால்கனகராஜ் பதில் அளிக்கையில், "நான் வந்து 35 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறேன்.. 2006ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்..35 வருடங்களாக வட சென்னை மக்களுடன் பழகியவன். எனக்கு வடசென்னையில் நிறைய நண்பர்கள் உண்டு.. நிறைய குடும்பங்கள் என்னை குடும்பத்தில் ஒருவராக பாவிக்கிறார்கள். கோயில் திருவிழா, ரம்ஜான் நோன்பு, கிறிஸ்துமஸ் விழா, பள்ளிக்கூட விழா என எல்லாவற்றுக்கு போய் உள்ளேன்.. நிறைய உதவிகள் செய்துள்ளேன்.. இந்த தொகுதியில் வாய்ப்பு தர வேண்டும் என்று மக்களே விரும்புகிறார்கள்" என்றார். மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து பால்கனகராஜ் பேட்டியில் கூறியுள்ளார். முழு பேட்டியை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்.












Click it and Unblock the Notifications