வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு: சீமான் மீது பாய்ந்தது வழக்கு- போலீஸ் அதிரடி!
வட மாநில தொழிலாளர்கள் மீது அவதூறாக பேசியதாக சீமான் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக திடீரென சமூக வலைதளங்களில் பாஜகவினர் வதந்தி பரப்பினர். வெளி மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களை சித்தரித்து தமிழ்நாட்டுடன் தொடர்புபடுத்தி இந்த அவதூறுகளை பரப்பினர்.

இதனால் வட இந்திய மாநிலங்களில், தமிழ்நாட்டில் உள்ள வட இந்திய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக சர்ச்சை வெடித்தது. பீகார் சட்டசபையிலும் இந்த பிரச்சனை வெடித்தது. இது தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகளின் குழுக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வும் நடத்தியது. இத்தகைய ஆய்வுகளுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தமிழ்நாடு போலீசார் கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர் போலீசார். இதனடிப்படையில் வதந்தி பரப்பியவர்கள், அவதூறு வீடியோ பகிர்ந்தவர்கள் என பலர் மீது வழக்கு பாய்ந்தது. பீகார், டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று போலீசார் கைது செய்தனர்.
மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வழக்கு பாய்ந்தது. இதேபோல் மேலும் சில தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டன.
தற்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வழக்கு பாய்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் வட இந்திய தொழிலாளர்கள் மீது கஞ்சா வழக்கு, பலாத்கார வழக்கு உள்ளிட்டவை போடப்படும்; தமிழ்நாட்டில் இருந்து தனி ரயிலில் வட இந்திய தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்து சீமான் பேசியிருந்தார். இந்த வீடியோவை பீகாரை சேர்ந்த அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாக ஏற்கனவே சீமான் மீது போடப்பட்ட வழக்குகளில் கூடுதல் பிரிவுகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. வட இந்திய தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதால் இந்திய தண்டனை சட்டம் 153(B)(c), 505(1)(c),506(1) ஆகிய பிரிவுகள் சீமான் மீதான முந்தைய வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications