பீகார் தொழிலாளர்கள் குறித்து வதந்தி- பாஜகவினர் மீது நடவடிக்கை எப்போ? தமிழ்த் தேச மக்கள் முன்னணி
பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது தமிழ் தேச மக்கள் முன்னணி.
சென்னை: பீகார் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேச மக்கள் முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுவதாகவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் பீகார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாசக பொறுப்பாளர்களால் சமூக வலைதளத்தில் பொய்ப் பரப்புரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அடுத்துஅடுத்து நடந்துவருகின்றன.
கோவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருதரப்புக்கு இடையில் நடந்த வன்முறை, திருப்பூரில் வட மாநிலத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு எதிராக நடந்த வன்முறை, இராஜஸ்தான் ஜோத்பூரில் நடந்த வன்முறை, ஐதராபாத் ஜியாகுடா பைபாசில் நடந்த வன்முறை, கர்நாடகா அவேரி மாவட்டத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றின் புகைப்படங்கள், காணொளிகளைப் போட்டு தமிழ்நாட்டில் இந்தி பேசுவோருக்கு எதிராக வரலாறு காணாத வெறுப்புப் பரப்புரையும் வன்முறையும் நடப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டன. கூடவே பீகாரில் நிதிஷ்குமார் அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றன? என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்பினர். ஒருபடி மேலே போய், தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலத் தொழிலாளர்கள் வெளியேறுவதற்கு தமிழக முதல்வர் கெடு விதித்திருப்பதாக டைனிக் பாஸ்கர் என்ற இந்தி நாளிதழில் முதல்பக்க செய்தி வெளியிடப்பட்டது. மார்ச் 4 ஆம் நாள் அன்று பீகார் சட்டப்பேரவையில் பாசகவினர் இந்தப் பிரச்சனையை எழுப்பி நிதிஷ் குமார் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படும் போது இராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி திமுக தலைவர் ஸ்டாலினுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனையை பீகார் மாநிலத்தில் தங்கள் தேர்தல் அரசியல் நலனுக்குப் பயன்படுத்தினர்.

இந்த சூழலில் பீகார் அரசு இது குறித்து ஆய்வு செய்வதற்கு என ஒரு குழுவை அமைத்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்து ஆய்வுசெய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு வதந்திப் பரப்பியவர்களில் சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டு பாசக தலைவர்களான அண்ணாமலை, முருகன், வானதி சீனிவாசன் போன்றோர் தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்பு அரசியலை இந்திப் பேசும் மக்களுக்கு எதிரானதாகக் காட்டி தமிழ்நாட்டு மக்கள் இந்திப் பேசும் மக்களை வெறுப்பவர்கள் என்று சித்திரிக்கும் வேலையை செய்துவருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை நாடு எதிர்நோக்கி உள்ள சூழலில் பாசகவுக்கு எதிராக அனைத்திந்திய அளவில் மாநிலக் கட்சிகள் அணிசேர்வதை பாசக விரும்பவில்லை. அப்படியான அணிசேர்க்கை உருவாவதைக் குலைக்கும் நோக்கில் இந்திப் பேசும் மாநிலங்கள் - இந்திப் பேசாத மாநிலங்கள் என்ற முரண்பாட்டைப் பயன்படுத்தும் முயற்சியே இது. இந்து - முசுலீம் என்று பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டிவிட்டு அதன்மூலம் அரசியல் பலன்களை அடைந்த கட்சிதான் பாசக. அதுபோலவே, இந்திப் பேசுவோர் - இந்திப் பேசாதோர் என்ற முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி வன்முறையை வளர்ப்பதன் மூலம் குளிர்காய முடியுமா? என்று பாசக பார்க்கிறது. தமிழர்கள் இந்திக்காரர்களை கொல்கிறார்கள்? என்ற புரளி வட இந்தியாவில் தீவிரமாகப் பரவி இதற்கு எதிர்வினையாக வட இந்தியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டிருந்தால் நிலைமை எவ்வளவு மோசமடைந்திருக்கும்? இன்னொருபுறம் தமிழர்கள் பீகாரிகளைக் கொல்கிறார்கள் என்ற புரளியை நம்பி இங்கிருந்து ஆயிரமாயிரமாய் வட இந்திய தொழிலாளர்கள் வெளியேறியிருந்தால் எவ்வளவு பதற்றம் ஏற்பட்டிருக்கும்? எனவே, பாசக கையில் எடுத்திருக்கும் இந்த அரசியல் என்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. தமிழ்நாடு அரசு மிகுந்த உறுதி காட்டி பாசகவினர் முதலான வதந்திப் பரப்பியோர் மீதும் இதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரத்தில், தமிழ்நாடு அரசு இந்த நிகழ்ச்சிக்கு எதிர்வினையாற்றுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் வெளிமாநிலத் தொழிலாளர் சிக்கல் தொடர்பில் எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் எவ்வித சட்டப் பாதுகாப்பும் இன்றி வேலை செய்து வருகின்றனர். ஒருபுறம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதீத சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் இன்னொருபுறம் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படுவதும் நடந்து வருகிறது. அத்துடன் கூடவே ஆயிரமாயிரமாய் வடமாநிலத் தொழிலாளர்கள் வந்து குவிவதால் மக்களிடையே பண்பாட்டு வகையிலான முரண்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வான சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சி நிலைமை இருக்கிறது. பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்நாட்டு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியது குறித்து அங்குள்ள கட்சிகள் கருதிப் பார்க்க வேண்டும். உண்மையில் வட இந்தியாவில் இருந்து இங்கு வந்து கொத்தடிமைகள் போல் வேலை செய்யும் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின் அந்தந்த மாநிலங்களில் உள்நாட்டு வேலைகளை உருவாக்குவதை நோக்கி அங்குள்ள கட்சிகள் சிந்தித்து , அரசியல் பொருளாதாரக் கொள்கையை மாற்ற முயலவேண்டும். ஆண்டொன்றுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவேன் என்றும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்றும் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து அதை கொஞ்சமும் நிறைவேற்றத் தவறிய தலைமை அமைச்சர் மோடியையும் பாசகவையும் நோக்கி பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.
தமிழ்நாட்டு வேலைகள் தமிழ்நாட்டவர்க்கே வழங்கப்பட வேண்டும். எப்படி தமிழ்நாட்டில் உள்ள மாநில, ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழர்களே பணியமர்த்தப்பட வேண்டும் என்று சொல்கிறோமோ அதுபோலவே தனியார் துறைகளில் உள்ள வேலைகளும் தமிழர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் துறை வேலைகளில் 80% தமிழ்நாட்டவர்களுக்கே என்று தமிழ்நாடு அரசு சட்டமியற்றி அதை கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும். "வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வராது, தமிழர்கள் வேலை செய்ய தயாராக இல்லை" என்று சொல்லி இங்குள்ள பெருமுதலாளிகள் குறைந்த கூலிக்கு வெளிமாநிலத்தவர்களைப் பணியமர்த்தி ஒட்டச் சுரண்டுவதற்கு ஒத்தூதக் கூடாது.
முதன்மையாக தமிழ்நாட்டில் எந்தெந்த தொழில்துறையில் வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டிய தேவையுள்ளது?. எத்தனை விழுக்காடு அனுமதிக்கலாம்? வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்வது, தமிழ்நாட்டிற்குள் வெளிமாநிலத்தவர் வருவதை முறைப்படுத்த உள்நுழைவு அனுமதி சீட்டுப்( Inner Line Permit) பெறும் முறையைக் கொண்டுவருவதற்கான அரசமைப்பு சட்டத் திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் மட்டுமே வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு பணியமர்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்டம் 1979 ஐ கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர், தமிழ்நாட்டுத் தொழிலாளர் என்ற வேறுபாடின்றி தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் குறைந்தபட்சக் கூலிச் சட்டம், சம வேலைக்கு சம ஊதியச் சட்டம் ஆகிய சட்டங்களைக் கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்பிரச்சனையை மேலோட்டமாக பாவித்து பாசக கிளப்பும் வதந்திப் பிரச்சனையாக மட்டும் கையாண்டுவிட முடியும் என்று திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கருத வேண்டாம். 'தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே' என்பதையும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் தேவையையும் வருகையையும் நிரந்தரமாக தங்குவதையும் ஒழுங்குபடுத்தவல்ல கொள்கை முடிவெடுத்து செயல்படுத்துவதையும் இப்போதிருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை தமிழ்நாட்டில் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் கடைபிடித்துவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கை அயல்முதலீடு சார்ந்த, நகரங்களை மையப்படுத்திய வளர்ச்சிக் கொள்கையாகும். வேளாண்மையை ஒழித்துக் கட்டி உழவர்களை வெளியேற்றும் கொள்கையாகும். இதனால் நாட்டின் ஒரு சில நகரங்களை நோக்கி குவியும் அயல்முதலீடு சார்ந்த தொழில்மயமாக்கல் குறைந்த கூலிக்கு உழைக்கும் தொழிலாளர்களை தன்னை நோக்கி ஈர்க்கிறது. உலகமய, தாராளமய, தனியார்மயம் சார்ந்த வளர்ச்சிக் கொள்கையில் இருந்து விடுபடாமல் வெளிமாநிலத் தொழிலாளர் சிக்கலுக்கு முழுத்தீர்வுக் கண்டுவிட முடியாது. உடனடிக் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதோடு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கையை எதிர்க்க தமிழ்நாட்டு மக்கள் முன்வரவேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications