தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள்.. வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய தேவையில்லை.. ஆர்.என்.ரவி ட்வீட்!
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் மிகவும் நட்பானவர்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனவும் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவதூறாக பரவி வருகிறது.
அதேபோல் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்களை, அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி வருவதாக வதந்திகள் பரவியது.

காவல்துறை நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. அதேபோல் வதந்தி பரப்பியவர்கள் மீது காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் போலி செய்தி வெளியிட்ட பிரபல பத்திரிகையாளர்களுக்கு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் பீகார் குழு
அதேபோல் தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்களின் நிலையை நேரில் ஆய்வு செய்வதற்காக மாநில கிராம வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து பீகார் அரசு உத்தரவிட்டது. இவர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். அதன் பின், தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பீகார் குழு நன்றி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பீகார் குழு கூறுகையில், பீகார் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசினோம். தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பொய்யான வீடியோக்களை சரியானவை என்று நம்பி வரும் எண்ணத்தை போக்க வேண்டும். பொய்யான வீடியோக்கள் திருப்பூர் மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களில் இருந்து வந்ததை தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்
இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications