தொடங்கிருச்சிப்பா..தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை..5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகுதாம்! உஷார்!!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தாமதமாக மழை தொடங்கினாலும் இயல்பை ஒட்டியே மழை அளவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 02ஆம் தேதி வரைக்கும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதோ..அதோ என்று போக்கு காட்டிய வடகிழக்கு பருவமழை நடப்பாண்டு சில நாட்கள் தாமதமாகவே தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் சமீபத்தில் உருவான சிட்ராங் புயல்தான் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருந்தனர்.
வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே இன்று தமிழகம், தெற்கு ஆந்திரா, புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நடப்பாண்டு 29ஆம் தேதி பருவமழை தொடங்கியுள்ளது.
நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 20 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 ஆண்டுகளாக இயல்வை விட அதிகமாகவே பதிவானது. நடப்பாண்டு இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 23ஆம் தேதியுடன் விடைபெற்ற நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா, வடதமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

14 மாவட்டங்களில் கனமழை
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றைய தினம்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மிககனமழை
31ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

20 மாவட்டங்களில் மழை
நவம்பர் 1ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவம்பர் 02ல் எங்கெங்கு மழை
நவம்பர் 02ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.