தமிழ்நாட்டிற்கு குட் பை சொன்ன வடகிழக்கு பருவமழை.. இனி குளிர் வாட்டும்.. சென்னையில் எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெள்ளத்தால் மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை இன்றுடன் விடை பெறுகிறது. இனி அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்றும் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் கடைசி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழைக் காலமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் 44.3 செமீ மழை கிடைக்கும்.

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் மாதத்தின் இறுதியில்தான் தீவிரமடையத் தொடங்கியது. டிசம்பர் முதல் வாரத்தில் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழையையும் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தியது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
டிசம்பர் மாத பிற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சூறையாடியது. தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்த காரணத்தால் வெள்ளத்தில் குடியிருப்புகள் மூழ்கின. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அபரிமிதமான அளவிற்கு பெய்த மழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன.
கடந்த வாரம் வரை டெல்டா மாவட்டங்களில் எதிர்பாராமல் கொட்டித்தீர்த்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில் மழை சற்றே ஓய்ந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரமும் வறண்ட வானிலையே நிலவியது. எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. ஈரோட்டில் அதிகபட்சமாக 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வடகிழக்கு பருவமழை இன்று ஜனவரி 15 முதல் விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
ஜனவரி 17ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 18, 19ஆம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications