சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுவதா?.. வெள்ளை அறிக்கை வெளியிடுங்க.. அரசுக்கு, சீமான் கோரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளை முழுமையாக ஆய்வுசெய்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உயிரிழப்பு குறைத்து காட்டுகிறது

உயிரிழப்பு குறைத்து காட்டுகிறது

கொரோனா இரண்டாவது அலைப்பரவலினால் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து நிற்கையில், நோய்த்தொற்று பரவல் விகிதம் அதிகமாகாமலிருந்தாலும் இறப்பு விகிதம் குறையவில்லை என்று வரும் முடிவுகள் பெருங்கவலையைத் தருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை அரசு மூடி மறைத்துக் குறைத்துக்காட்டுவது நிலையை மேலும் சிக்கலாக்குகிறது.

பின்விளைவுகளை ஏற்படுத்தும்

பின்விளைவுகளை ஏற்படுத்தும்

கொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை உள்ளது உள்ளபடியே அறிவிப்பதன் மூலமே தொற்றுப்பரவலின் தீவிரத்தையும், வீரியத்தையும் உணர்ந்து அதற்கேற்றார் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மக்களை விழிப்பூட்டவும் முடியும் எனும்போது அதனைச் செய்ய மறுத்து, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த கூடாதென்பதற்காக உண்மையான இறப்பு எண்ணிக்கையை மறைப்பதென்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் பேராபத்தாகும்.

மோசடி நடந்துள்ளது

மோசடி நடந்துள்ளது

கொரோனா உயிரிழப்புகள் குறித்து, சமூகநல அமைப்பான அறப்போர் இயக்கம் கள ஆய்வு மூலம் வெளியிட்டுள்ள தகவல்கள், ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேலான கொரோனா உயிரிழப்புகள் குறைத்துக் காட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றது. இது அரசு அறிவித்துள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையைவிடப் பத்து மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தோடு, ஊடகவியலாளர் சந்தியா ரவிசங்கர் அவர்களும் புள்ளி விவரங்களோடு இறப்பு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதை உறுதிப்படுத்துகிறார்.

அரசு அலட்சியம்

அரசு அலட்சியம்

கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமடைந்த பின்னும் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் அது கொரானா தொற்றுக் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பாகவே கணக்கிடப்பட வேண்டும் என இந்திய மருத்துவக்கழகம் அறிவித்துள்ள விதிமுறைகளை தமிழ்நாடு அரசு முறையாகக் கடைப்பிடிப்பதில்லை; கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த நபர் துணைநோயினால் இறக்க நேரிட்டால் அவை கொரோனா உயிரிழப்புகள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை என்பதெல்லாம் அரசின் அலட்சியத்தையும், மக்கள் விரோதத்தையும் வெளிக்காட்டுவதாக உள்ளது.

அதிமுக செய்த அதே தவறு

அதிமுக செய்த அதே தவறு

தொற்றுப்பரவல் இல்லாத இயல்பு காலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைவிடப் பன்மடங்கு அதிகமாக உயிரிழப்புகள் பதிவாகும் நிலையில், அந்த மருத்துவமனைகள் வெளியிடும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையோ மிகச்சொற்ப அளவிலேயே உள்ளது. இது உயிரிழப்புகள் மறைக்கப்படுகிறது எனும் வாதத்தில் இருக்கும் உண்மையை எடுத்துரைக்கிறது. அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தானெனக்கூறி, ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக, அதிமுக செய்த அதே பெருந்தவறை செய்து மக்களின் உயிரை துச்சமாகக் கருதுவது வெட்கக்கேடானது.

நிதியுதவி பெறுவதில் சிக்கல்

நிதியுதவி பெறுவதில் சிக்கல்

கொரோனா காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்டுவதினால் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்க அரசே மறைமுகக்காரணமாவது மட்டுமின்றி, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எவ்விதத் துயர் துடைப்பு உதவிகளும் கிடைக்கப்பெறாது போவதற்குக் காரணமாக அமைகிறது. அரசின் இத்தகைய மோசமான அணுகுமுறையாலும், நிர்வாக முறையாலும் கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவிகள் பெறுவதில் பெருஞ்சிக்கல் நிலவுகிறது.

ஏமாற்றம் தருகிறது

ஏமாற்றம் தருகிறது

இதனால், அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற முதல்நாளன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் தான் புகழுரையையோ, பொய்யுரையையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லையென்றும், முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம்" என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தான் கூறியவற்றை வெறும் வெற்று வார்த்தைகளாகக் காற்றில் பறக்கவிடுவது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

வெள்ளை அறிக்கை வெளியிடனும்

வெள்ளை அறிக்கை வெளியிடனும்

ஆகவே, கொரோனா உயிரிழப்புகள் குறித்துச் சான்றிதழ் வழங்குவதில் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடித்து உண்மையான மரணங்களின் எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும் எனவும், இரண்டாவது அலைப்பரவலில் தமிழகத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை முழுமையாக ஆய்வுசெய்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

English summary
ntk seeman has requested the Tamil Nadu government to fully investigate the loss of life in Tamil Nadu and issue a white paper
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X