சென்னை நுங்கம்பாக்கம் மதுபான பாரில் நடந்த சம்பவம்.. புனேவில் சிக்கிய திமுக பிரமுகர் தூண்டில் ராஜா
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபாரில் கடந்த மாதம் 22-ந் தேதி பெரிய அளவில் அடிதடி நடந்தது. இந்த வழக்கை சாதாரண அடிதடி வழக்காக நினைத்த போலீசாருக்கு, இதன் பின்னணியை விசாரித்த போது தான் மிகப்பெரிய பிரச்சனைகள் தெரியவந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரிய ஆட்கள் என்பதுடன். இவர்கள் ஒவ்வொருவர் மீதும் புதிய புகார்கள் வந்துள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தி.மு.க பிரமுகர் தூண்டில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. பிரமுகர் பிரசாத் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபாரில் கடந்த மே மாதம் 22-ந் தேதி பெரிய அளவில் அடிதடி மோதல் சம்பவம் நடந்திருந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் செல்வபாரதி என்பவரது தலைமையில் ஒரு குழுவினரும், தூண்டில் ராஜா என்பவர் தலைமையில் இன்னொரு குழுவினரும் இந்த மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் பாரில் உள்ள பொருட்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தபட்டதாக கூறப்படுகிறது. பீர் பாட்டிலை உடைத்தும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதல் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் மதுபாரின் மேலாளர் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்ட இரு குழுவினர் தரப்பிலும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்த புகார்கள் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை நுங்கம்பாக்கம் போலீசார், சாதாரண அடிதடி மோதல் வழக்காக கருதியே விசாரித்தனர். அதன்பின்னர் அடிதடி சண்டை வழக்கை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கில் மோதலில் ஈடுபட்டவர்கள் யார், யார்? என்பது பற்றி விசாரித்தபோது போலீசாருக்கு பெரிய உண்மை தெரியவந்தது.
பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதும் தெரியவந்தது. பின்னாளில் இவர்கள் மோதலில் ஈடுபடும் வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கள் எழுந்தது. முதலில் இந்த வழக்கில் செல்வபாரதி என்பவர் கைது செய்யப்படார். அவர் ஓய்வுபெற்ற கூடுதல் காவல் காணிப்பாளரின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு எதிர்தரப்பை சேர்ந்த அஜய்ரோகன், பிரசாத், நாகேந்திர சேதுபதி ஆகியோர் கைதாகினார்கள்.
இவர்களில் பிரசாத், அ.தி.மு.க பிரமுகர் என்பதும், அஜய்ரோகனும் அ.தி.மு.கவை சேர்ந்தவர் என்பதும் விசாரணயில் தெரியவந்தது. நாகேந்திர சேதுபதி, நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் இந்த வழக்கில் பிரசாத், நாகேந்திர சேதுபதி, அஜய் ரோகன் ஆகியோரது குழுவின் தலைவராக செயல்பட்ட திமுகவைச் சேர்ந்த பிரமுகரான தூண்டில் ராஜா என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். தலைமறைவாக இருந்தவரை நேற்று தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வைத்து கைது செய்தனர்.
இந்தநிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வபாரதி, பிரசாத், நாகேந்திர சேதுபதி, அஜய் ரோகன் ஆகிய 4 பேரை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இவர்களை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பேரில் அவர்கள் 4 பேரிடமும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் அ.தி.மு.க பிரமுகர் பிரசாத் மீது மோசடி புகார்கள் உள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது, அரசு வேலை வாங்கி தருவதாக சேலத்தை சேர்ந்த குழந்தைவேலு என்பவரிடம் ரூ.11 லட்சமும், அசோக் குமார் என்பவரிடம் ரூ.5 லட்சமும் வாங்கி மோசடி செய்ததாக பிரசாத் மீது குற்றச்சாட்டு உள்ளது. அந்த புகார்கள் மீதும் பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் அஜய் ரோகன் மீதும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக புகார் உள்ளதாம். அதுபற்றியும் விசாரணை நடக்கிறது. சாதாரண அடிதடி வழக்காக கருதப்பட்ட இந்த வழக்கு தற்போது வேறு மாதிரி இருக்கிறது.












Click it and Unblock the Notifications