அடடே.. முதல்வர் ஸ்டாலினை பாராட்டி தள்ளும் ஓபிஎஸ்.. முழு ஊரடங்கு உத்தரவுக்கும் வரவேற்பு
சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, டாஸ்மாக் மதுபான கடை மூடப்படும் என அறிவித்தது மற்றும் அம்மா கேண்டீன்கள் திறந்திருக்கும் என அறிவித்தது ஆகியவற்றுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை வெகுவாக பாராட்டியுள்ளார், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.
Recommended Video
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: பாதுகாப்பாய் இருப்போம்! தொற்று பரவலை தடுப்போம்! கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய் தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும்.
எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.

அவசரம் வேண்டாம்
மே-10 ஆம் தேதி முதல் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இன்றும், நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல், கூட்டம் கூடுதலைத் தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

வாடகை கார், ஆட்டோ இயங்க வேண்டும்
காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வதும் மிகவும் அவசியம், அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் ஏழை எளிய பொதுமக்கள், அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

மினி கிளினிக்
மேலும் மினி கிளினிக்குகளின் எண்ணிக்கையையும், அதில் தற்காலிக மருத்துவர்களின் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும், நோயாளிகளின் சிரமமும் களையப்படும்.

ஊக்கத் தொகை
கடந்த ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களது சேவையை கவுரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும்.

ஆக்சிஜன் இருப்பு
மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும், உயிர்பலி எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
|
ஓபிஎஸ் பாராட்டு மழை
நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாகக் கடைபிடித்து, மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும் முழு ஊரடங்கு உத்தரவு வராது என ஏப்ரல் கடைசி வாரத்தில் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் தற்போது நோய் பரவலை தடுக்க ஸ்டாலின் ஊரடங்கை அறிவித்துள்ளார். இதை அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலின் முடிவை பாராட்டி தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications