‛படுத்துறாங்க’.. ‛வடிவேல்’ டயலாக்கால் ஈபிஎஸ்ஸை கிண்டலடித்த ஓபிஎஸ்.. ரணகளத்திலும் சிரித்தபடி காமெடி!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு ஓ பன்னீர் செல்வம் தரப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, நீதிமன்றத்தை நாடியுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்நிலையில் தான் நடிகர் வடிவேல் டயலாக்கை கூறி எடப்பாடி பழனிச்சாமி அணியை ஓ பன்னீர் செல்வம் கிண்டலடித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் கட்சியின் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
நாளை வரை வேட்புமனுத்தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டது. மேலும் வேட்புமனு பரிசீலனை 20ம் தேதி நடப்பதோடு, மனுவை திரும்ப பெற 21ம் தேதி கடைசியாகும். அதன்பிறகு மார்ச் 26ல் தேர்தல் நடத்தப்பட்டு மார்ச் 27 ல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈபிஎஸ் மனுத்தாக்கல்
இந்நிலையில் தான் இன்று முதல் ஆளாக எடப்பாடி பழனிச்சாமி மனுத்தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயர்நீதிமன்றத்தில் மனு
இந்த அறிவிப்பு ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு அதிர்ச்சியை வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுதொடர்பான மனு நாளை காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்
அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டை கண்டித்தனர். இதுபற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில்,‛‛இப்போது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமானது. தேர்தல் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும்" என விமர்சித்தார்.

ஓ பன்னீர் செல்வம் அட்டாக்
அதேபோல் ஓ.பன்னீர்செல்வம், ‛‛5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்துவதற்கு முன்பாக உறுப்பினர் படிவம் அளிக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இதை எல்லாம் முடித்த பிறகுதான் அதிமுகவின் உட்சபட்ச பதவிக்கு தேர்தல் நடைபெற வேண்டும். இவை எதுவும் செய்யாமல் பிக் பாக்கெட் அடிப்பது போன்று பதவியை பெற முயற்சிக்கிறார்கள். எதுவுமே முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அணி மீது அதிமுக தொண்டர்கள் நம்பிக்கை வைத்திருந்தால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இது நடக்கவில்லை'' என விமர்சனம் செய்தார்.

வடிவேல் டயலாக்கில் கிண்டல்
மேலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி அணியை, ஓ பன்னீர் செல்வம் நடிகர் வடிவேல் பேசிய டயலாக்கை பயன்படுத்தி கிண்டல் செய்தார். அதாவது பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ பன்னீர் செல்வத்தை கைக்காட்டி, ‛‛இவரை ஆளாக்கியது ஜெயலலிதா. என்னை ஆளாக்கியது எம்ஜிஆர். ஆனால் தற்போது அவர்கள் 2 பேரும் இல்லாத நிலையில் இவர்கள் பண்ற கூத்து தாங்கமுடியவில்லை'' என்றார். இந்த வேளையில் அருகே சிரித்தபடி அமர்ந்திருந்த ஓ பன்னீர் செல்வம், ‛‛ச்.. அய்யோ.. படுத்துறாங்க.. வடிவேல் சொன்ன மாதிரி தான்'' என எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கிண்டல் செய்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.












Click it and Unblock the Notifications