அடுத்த ரவுண்ட்.. மீண்டும் அசெம்பிள் ஆகும் ஓபிஎஸ் டீம்.. எடப்பாடி மனசு மாறுச்சே.. வரலாறு திரும்புமா?
சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தன்னுடன் பேசி வருவதாக ஓபிஎஸ் தெரிவித்தார். இந்நிலையில், அடுத்த ரவுண்ட் ஆட்டத்திற்கு தயாராகி வருகிறாராம் ஓபிஎஸ்.. அப்படி என்ன திட்டம்? விசாரித்தால் புட்டுப் புட்டு வைக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.
எடப்பாடி பழனிசாமியுடன் மல்லுக்கு நிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தனது புரட்சிப் பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த 3ஆம் தேதி காஞ்சிபுரம் களியனூர் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பொதுக்கூட்டம் தொடங்கியது முதலே மழை பெய்யத் தொடங்கியது. எனினும், புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மழையையும் பொருட்படுத்தாது மேடைக்கு வந்து சேர்ந்தார். ஆனால், மழை காரணமாக கூட்டம் கலைந்ததால் புரட்சிப் பயண பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக அதிமுக கூட்டணி முறிவு: இதற்கிடையே தான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதலால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி, பாஜக கூட்டணியில் இனி அதிமுக இல்லை என அறிவித்தார். அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தவறாக பேசி வந்ததால் இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அடுத்து பாஜக தங்கள் பக்கம் திரும்பும் என எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகிறது ஓபிஎஸ் டீம். 2024 தேர்தல் கூட்டணி தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுடன் சென்னை தனியார் ஹோட்டலில் அண்மையில் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கடந்த ஒரு மாத காலமாக பா.ஜ.க தேசியத் தலைமை தினமும் என்னிடம் தொடர்பில் இருக்கிறது எனத் தெரிவித்தார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் டீம் உற்சாகம்: எடப்பாடி பழனிசாமி - பாஜக மோதல் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. அடுத்தகட்டமாக ஒரு மாஸ் பிளானை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறாராம் ஓபிஎஸ். அது என்ன என்று ஓபிஎஸ் தரப்பில் விசாரித்தோம். காஞ்சிபுரத்தில் நடக்கவிருந்த பொதுக்கூட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், கோவை கொடீசியா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறாராம் ஓபிஎஸ்.
ஏற்கனவே, ஓபிஎஸ் 2017ல் தர்மயுத்தம் நடத்தியபோது, ஜூலை மாதம் கோவை கொடிசியாவில் மாஸாக ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார். அந்தப் பொதுக்கூட்டமே திருப்புமுனையாக அமைந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு, ஓபிஎஸ் தரப்பு தனித்துச் செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது, அவர் தேவையே இல்லை என்று எதிர் தரப்பு கூறி வந்த சூழலில், செயல்வீரர்கள் கூட்டத்தை கோவையில் மாநாடு போல நடத்தி மாஸ் காட்டியது ஓ.பி.எஸ் அணி. இதில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் உற்சாகம் அடைந்தார் ஓபிஎஸ்.
திருப்புமுனை கூட்டம்: கொடிசியாவில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா? அங்கு இருப்பவர்கள் பெட்டிக்காக மட்டுமே இருக்கிறார்கள். இங்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவில் இரண்டு அணிகளெல்லாம் இல்லை. இந்த ஒரே அணிதான். ஆட்சி கலைந்து தேர்தல் என்று வந்தால் தெரியும் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

இந்தக் கூட்டம் பற்றிய ரிப்போர்ட், எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு சென்றது. கொங்கு மண்டலத்திலேயே, ஓபிஎஸ் இவ்வளவு கூட்டத்தை திரட்டி இருக்கிறார், கட்சியில் அவரது பலம் குறையவில்லை, தொண்டர்கள் அவர் பக்கமும் இருக்கிறார்கள் என ரிப்போர்ட் சென்றதை கேட்டுத்தான், ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்த்துக்கொண்டு, அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியையும், துணை முதல்வர் பதவியையும் கொடுக்கவே சம்மதித்தாராம் ஈபிஎஸ்.
வரலாறு திரும்புமா?: அதேபோல, இப்போது கோவை கொடிசியாவில் நடத்தவிருக்கும் கூட்டமும், ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். ஓபிஎஸ்ஸுக்கு திரளும் கூட்டத்தைப் பார்த்து, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை ஏற்கும் முடிவுக்கு வருவார் என்கிறார்கள். 2017 மீண்டும் திரும்புமா? ஓபிஎஸுக்கு எதிர்காலம் உருவாகுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications