புது ரூட்டுலதான்.. புது வருடத்தில் அரசியல் காய்களை நகர்த்த தொடங்கிய ஓபிஎஸ்.. ‘தலை’க்கே லெட்டர்! ஓஹோ!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம், புத்தாண்டில் புது தெம்புடன் புது முயற்சியை கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. வரும் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால், அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் ஓபிஎஸ்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவுகுப் பிறகு சசிகலா தரப்புக்கு எதிராக தர்மயுத்தம் மேற்கொண்டார். பின்னர் சசிகலா சிறைக்குப் போக, எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முதன்மைப் பதவியைப் பெற்றார். துணை முதலமைச்சராகவும் இருந்தார். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீக்கப்பட்டார்.

இதற்காக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் ஓபிஎஸ். தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். அவருக்கு மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஐயப்பன் என ஒருசில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. ஆனால், நீதிமன்றங்களில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான சூழல் கனியவே இல்லை. இதன் உச்சமாக, ஓபிஎஸ், இனி அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், அதிமுக கட்சி வேட்டியையே கட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஓபிஎஸ். தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ஓபிஎஸ். தன்னை நீக்கியதற்கு நியாயம் கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தையும் தொடங்கியுள்ளார் ஓபிஎஸ். மேலும் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமியின் கோட்டை எனக் கூறப்படும் கோவையில் ஜனவரி மாதம் பிரமாண்ட மாநாட்டையும் நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
2017ஆம் ஆண்டு கோவை கொடீசியாவில் பிரமாண்ட மாநாட்டை நடத்திக் காட்டிய பிறகுதான், எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ்ஸை பேச்சுவார்த்தைக்கு சென்று சந்தித்து, ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்த்துக்கொண்டு, அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியையும், துணை முதல்வர் பதவியையும் கொடுத்தது. அதேபோல, இப்போது கோவையில் நடத்தவிருக்கும் கூட்டமும், ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
அதேபோல பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், தங்கள் அணி சார்பாக பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார் ஓபிஎஸ். இதற்காக, டெல்லி மேலிட புள்ளிகளுடன் ஓபிஎஸ் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
வரும் புத்தாண்டு தேர்தல் ஆண்டாகவும் இருக்கப்போகிறது. லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் தான், பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், ஸ்பெஷலாக பிரதமர் மோடிக்கும் 'புத்தாண்டு வாழ்த்து’களை கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்ஸின் இந்த கடிதம் வாழ்த்து மட்டுமல்ல, வெளிப்படையான தூதும் தான் என்கிறார்கள். பாஜக கூட்டணியில் தான் இணைய விரும்புவதை இதன் மூலம் மறைமுகமாகத் தெரிவிக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள். புத்தாண்டில் புது ரூட்டில் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் ஓபிஎஸ். ஓபிஎஸ்ஸின் முயற்சிக்கு டெல்லியின் கனிவுப் பார்வை கிட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications