சென்னையில் பிரபல தனியார் கல்லூரி ஆக்கிரமித்திருந்த ரூ. 2000 கோடி நிலம்.. அதிரடியாக மீட்ட அரசு
சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.2,000 கோடி மதிப்பிலான 91.4 ஏக்கர் நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர். இந்த இடத்தைப் பார்வையிட்ட வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தமிழகம் முழுவதும் ஆக்கிரப்பில் உள்ள வருவாய்துறையின் இடங்கள் மீட்கப்படும் என்றார்.
சென்னை செம்மஞ்சேரி ராஜிவ்காந்தி சாலையில் இயங்கி வரும் தனியார் கல்வி குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வருவாய்த்துறைக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு மீட்டுள்ளது. .
குறிப்பிட்ட தனியார் கல்வி குழும வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில், வருவாய்த்துறைக்கு சொந்தமான 91.4 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலத்தில் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. மற்ற நிலங்கள் காலியாக இருந்தன. இது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த 2003ல் ஆய்வு செய்தனர். அப்போது, வருவாய்த்துறைக்கு சொந்தமான 91.04 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு நீதிமன்றம்
இதை தொடர்ந்து, 91.04 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வருவாய்த்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலம் மீட்பு
இதை தொடர்ந்து தமிழ்நாடு நில மேம்பாட்டு ஆணையத்தில் தனியார் கல்விக்குழுமம் சார்பில் மேல்முறையீடு செய்தது. ஆனால், ஆணையம் சார்பில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து தமிழக வருவாய்த் துறைக்கு சாதகமான உத்தரவுகள் வந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, தமிழ்நாடு நில மேம்பாட்டு ஆணையர் நாகராஜ் ஆகியோர் தலைமையில், வருவாய்த் துறையினர் நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். தொடர்ந்து, அந்த இடத்தில் 'அரசுக்கு சொந்தமான நிலம்'என்ற பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டது.

சாத்தூர் ராமச்சந்திரன்
மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை, வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன்,தென் சென்னை எம்.பி. தமிழச்சிதங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்ஆகியோர் நேரில் பார்வையிட்டார்கள்.

நிலம் மீட்பு
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறும் போது, கடந்த 20 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி, முறையான நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த 91.4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் தங்கியுள்ள மாணவிகளை வேறு இடத்துக்கு முறையாக மாற்றப்படும். அதன்பிறகே , கட்டிடம் இடிக்கப்படும். தற்போது இந்தஇடத்தின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி. அரசின் பல திட்டங்களுக்கு பயன்படுத்த நிலம் இல்லாத சூழல் இருக்கிறது. இனி இந்த இடம் அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

அதிரடி உத்தரவு
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வருவாய் துறையின் நிலங்களை கண்டறிந்து மீட்க உள்ளோம். அதேபோல, குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்கள், குத்தகையில் குறிப்பிட்ட பயன்பாடின்றிவேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்திலும் அதையும் மீட்போம். மேலும் சந்தை மதிப்புக்கு ஏற்ப குத்தகை தொகை இல்லாத பட்சத்திலும் அவற்றை மீட்போம்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications