இது வங்கியின் தோல்வி அல்ல.. அரசாங்கத்தின் தோல்வி.. நிர்மலா சீதாராமனுக்கு மாணிக்கம் தாகூர் சராமரி கேள்வி
சென்னை: சகோதரியின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பெறுவதற்கான ஆதாரமாக, ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் அவரது எலும்புக்கூட்டைத் தோண்டியெடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாணிக்கம் தாகூர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பதிவு வெளியிட்டுள்ளார். நிதியமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? இதற்குப் பொறுப்பான பொது மேலாளரை அவர் சஸ்பெண்ட் செய்வாரா? இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு வங்கி மேலாளர் பொறுப்பேற்கச் செய்யப்படுவாரா? அல்லது வழக்கம் போல மௌனம் காக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஒடிசா மாநிலத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஒடிசாவிலிருந்து வரும் இந்தச் செய்தி வெறும் அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல-மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் கண்காணிப்பில் நமது வங்கி நடைமுறை எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதையும் இது அம்பலப்படுத்துகிறது.

தனது சகோதரியின் இறப்பை நிரூபித்து, அவருக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக, ஒரு மனிதர் தனது சொந்தச் சகோதரியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்-இந்த அளவு கொடூரத்தை ஒரு அமைப்பு கோருகிறது என்றால் அது என்ன மாதிரியான நடைமுறை? இது "உரிய விசாரணை" அல்ல, இது மனிதத்தன்மையற்ற செயல்.
கடந்த சில ஆண்டுகளாக, வங்கிகள் செல்வந்தர்களுக்கு மென்மையான பாதைகளாக மாறிவிட்டன-பெரிய அளவிலான கடன்களைத் தள்ளுபடி செய்வதும், விதிகளையும் சட்டங்களையும் வளைப்பதும், செல்வாக்கு மிக்க கடனாளிகளைப் பார்த்தும் பார்க்காமல் விடுவதுமே வங்கிகளின் வேலையாகிவிட்டது. ஆனால் சாமானிய குடிமக்களுக்கு? முடிவே இல்லாத காகித வேலைகள், சந்தேகம், அவமானம், இப்போது இந்தத் திகிலூட்டும் சோதனையும் சேர்ந்திருக்கிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுப்பாரா? இதற்குப் பொறுப்பான பொது மேலாளரை அவர் சஸ்பெண்ட் செய்வாரா? இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு வங்கி மேலாளர் பொறுப்பேற்கச் செய்யப்படுவாரா? அல்லது வழக்கம் போல மௌனம் காக்கப்படுமா? ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வங்கித் துறையை நிர்வாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், மேலிடத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னால் இன்னும் எத்தனை இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வேண்டும்? பொறுப்புக்கூறல் என்பது ஒரு சார்புடையதாக இருக்கக்கூடாது. செல்வந்தர்களுக்காக மலைகளைக் கூட அசைக்கும் இந்த அமைப்பு, ஏழைகளை குறைந்தபட்சம் கண்ணியத்துடனாவது நடத்த வேண்டும்.
இது ஒரு வங்கியின் தோல்வி மட்டுமல்ல. இது அரசாங்கத்தின் தோல்வி" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
என்ன நடந்தது ?
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்துரு மஜ்கி. இவரது சகோதரி பனா மஜ்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். உயிரிழந்த பனா மஜ்கியின் வங்கிக் கணக்கில் அவர் சேமித்து வைத்திருந்த ஒரு குறிப்பிட்ட தொகை (சுமார் 25,000 ரூபாய்க்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது) இருந்துள்ளது.
அந்தப் பணத்தை எடுப்பதற்காக சந்துரு மஜ்கி வங்கிக்குச் சென்றபோது, வங்கி அதிகாரிகள் அவரது சகோதரி இறந்ததற்கான "இறப்புச் சான்றிதழ்" அல்லது அதிகாரப்பூர்வ ஆதாரங்களைக் கேட்டுள்ளனர். கிராமப்புறங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பல நேரங்களில் இறப்புச் செய்தியை முறையாகப் பதிவு செய்வதில்லை. இதனால் அவரிடம் உடனடி சான்றிதழ் இல்லை. வங்கி அதிகாரிகள் தொடர்ந்து ஆதாரங்களைக் கேட்டு வற்புறுத்தியதாகவும், அவர் சொன்ன காரணங்களை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
வங்கி அதிகாரிகளுக்குத் தனது சகோதரி இறந்துவிட்டார் என்பதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்ற விரக்தியில், சந்துரு மஜ்கி ஊர் மக்கள் முன்னிலையில் இடுகாட்டிற்குச் சென்று, அடக்கம் செய்யப்பட்ட தனது சகோதரியின் உடலை (எலும்புக்கூடாக மாறிய நிலையில்) தோண்டி எடுத்துள்ளார். தோண்டியெடுத்த அந்த எலும்புகளை ஒரு மூட்டையில் கட்டி, அதை ஆதாரமாகக் காண்பிக்க அவர் முயன்றது காண்போரை நெஞ்சைப் பதற வைத்தது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். "டிஜிட்டல் இந்தியா" பேசும் நாட்டில், ஒரு ஏழை தனது உரிமையைப் பெற இவ்வளவு கொடூரமான செயலைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? கார்ப்பரேட் நிறுவனங்களின் பல கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் வங்கிகள், ஏழை மக்களிடம் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடி காட்டுகின்றன? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த நபருக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், வங்கி நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.














Click it and Unblock the Notifications