ரயில் விபத்தில் இறந்தவரின் இதயம் வெளியே வந்து விழுந்தது.. சென்னை திரும்பிய பயணி திடுக் பேட்டி
சென்னை: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பியுள்ளனர். விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து பலரும் மீள முடியாத துயரத்தில் இருக்கின்றனர். பொது பெட்டியில் பயணம் செய்த பலரும் உயிரிழந்து விட்டனர். சிலரது இதயம் நெஞ்சுக்கூட்டில் இருந்து வெளியே விழுந்ததை பார்த்ததாக கூறியுள்ளார் உயிர் தப்பிய பயணி.
கொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. கொல்கத்தாவில் இருந்து நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது.

பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூரில் இருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு நின்று கொண்டிருந்தது. அப்போது இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது.
இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ1, ஏ2 பெட்டிகளும் மற்றும் பி2 முதல் பி9 பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்தன. இதே போன்று, பெங்களூர்- ஹவுரா ரயிலில் 4 பெட்டிகளும் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்து நடந்த போது, நிலநடுக்கம் ஏற்பட்டது போல ரயிலின் பெட்டிகள் குலுங்கியதாகவும், என்னவென்று தெரியாமல் அச்சத்தில் உறைந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். முன்பதிவு இல்லாத பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் அதிகம் சேதம் அடைந்ததாக அதில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர் பிழைத்த பயணிகள் 50 பேர் புவனேஸ்வரில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளனர். அதில் லயோலா கல்லூரியில் படித்து வரும் மாணவி ராஜலட்சுமி என்பவர் விபத்தில் இருந்து மீண்டு சென்னைக்கு திரும்பியுள்ளார். விபத்து நேரிட்ட போது தான் சந்தித்தவற்றை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கொல்கத்தாவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு 7 மணிக்கு ஒரு சத்தம் கேட்டது. எங்கள் பெட்டியில் இருந்தவர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. நெருப்பு பிடிப்பது போல புகை வர ஆரம்பித்தது. ரயில் நின்ற உடன் நாங்கள் இறங்கி போக ஆரம்பித்தோம். பி 6 பெட்டியில் இருந்து அதன் பின்னர் இருந்த பெட்டிகள் பாதுகாப்பாக இருந்தது.
3 டிராக் மொத்தமுமே விபத்தில் சிக்கி பெட்டிகள் கவிழ்ந்து கிடந்து. சரியான நேரத்தில்தான் போய் கொண்டிருந்தது. இன்ஜின், பொது பெட்டிகள், ஸ்லீப்பர் கோச் பெட்டிகள்தான் அதிகம் சேதமடைந்தன. எங்களின் கண் முன்னே பலர் இறந்து கிடந்தனர். சிலர் பலத்த காயத்தினால் அலறிக்கொண்டிருந்தனர். அரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வர ஆரம்பித்தது.
ஏசி கோச்சில் பயணம் செய்தவர்கள் ஓரளவிற்கு உயிர் பிழைத்தனர். தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. என்னுடன் பயணம் செய்தவர்களில் சிலருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டது. பொது பெட்டியில் வந்தவர்கள் பலர் உயிரிழந்து விட்டனர். பொது பெட்டியில் வந்தவர்கள் அழுது கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது தன்னுடன் வந்தவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறினர்.
சென்னைக்கு வேலை தேடி வந்தவர்கள் பலரும் பொது பெட்டியில் பயணம் செய்தனர். அவர்களில் பலரும் உயிரிழந்து விட்டனர். அவர்களிடம் விசாரித்த போது தன்னுடன் வந்தவரின் இதயம் வெளியே வந்து ரத்தம் தெறித்து உயிரிழந்து விட்டதாக கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று மாணவி ராஜலட்சுமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications