இயந்திரத்தில் சிக்கிய ஏடிஎம் கார்டு.. வடஇந்திய இளைஞர் செய்த காரியம்! ஜெயிலில் கம்பி எண்ணும் பரிதாபம்
சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கிய ஏடிஎம் கார்டை மீட்க பலவகையில் முயற்சித்து பலன் கிடைக்காமல் ஏடிஎம் அறையிலேயே உறங்கிய வட மாநில இளைஞரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து இருக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஜி.என்.டி. சாலை ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஒரு பரபரப்பான பகுதியாக உள்ளது.
இந்த சாலையில் முக்கிய வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் உறங்கியதற்காக வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஒடிசா இளைஞர்
சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 26 வயதான அஸ்வின் நாயக் என்ற இந்த இளைஞர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். குடிபோதையில் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க சென்று இருக்கிறார். ஏடிஎம் இயந்திரத்தில் தன்னுடைய ஏடிஎம் கார்டை சொருகிய அவர் ஏடிஎம் கார்டை திரும்ப எடுக்க முடியாமல் மது போதையில் திணறி இருக்கிறார்.

முயற்சி தோல்வி
பலவகையில் முயற்சித்தும் இயந்திரத்தில் சிக்கிய ஏடிஎம் கார்டை எடுக்க முடியாமல் தவித்த வட மாநில இளைஞர் அஸ்வின் நாயக், ஒரு கட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தின் பின்புறம் உள்ள பாதுகாப்பு கவசத்தை கழற்றி ஏடிஎம் கார்டை எடுக்க முயற்சித்து உள்ளார். இருந்தபோதிலும் அவரது முயற்சிக்கு தோல்வியே கிடைத்தது.

விடிய விடிய உறக்கம்
பல முறை முயற்சித்தும் ஏடிஎம் கார்டை எடுக்க முடியாததால் ஒரு கட்டத்தில் சோர்வடைந்தார் அஸ்வின் நாயக். நேரமும் கடந்துவிட்டதால் வேறு வழியின்றி அந்த ஏடிஎம் மையத்திலேயே படுத்து விடிய விடிய தூங்கி உள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் அதிகாலை பணிக்கு வந்த வங்கி காவலாளி ஏடிஎம் இயந்திரத்தில் வடமாநில இளைஞர் தூங்குவதை பார்த்து உள்ளார்.

சிறையில் அடைப்பு
உடனே இது தொடர்பாக அவர் காவல்துறைக்கு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ஒடிசா இளைஞர் அஸ்வின் நாயக்கை கைது செய்த போலீசார், அவரை கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications