ஓணம் பண்டிகை கொண்டாட்டம் - மோடி, ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ஓணம் பண்டிகை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.
சென்னை: கொரோனா பரவலுக்கு மத்தியில் ஓணம் பண்டிகை இன்று மலையாளம் பேசும் மொழி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து பூ கோலமிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் திருவிழா விமர்சையாக கொண்டாடி மகிழ்கின்றனர். மகிழ்ச்சியான இந்த பண்டிகை நாளில் மலையாள மக்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.
திருமால் வாமன அவதாரம் பூண்டு மகாபலி சக்கரவர்த்தியை அடக்கி பின்னர் அம்மன்னன் வேண்டிய வரமான மக்கள் அனைவரும் எப்போதும் சுபிட்சமாக இருக்கும் இருக்க வேண்டும், ஆண்டுதோறும் அவர்கள் சுபிட்சமாக இருப்பதை காணவேண்டும் என்றும் மகாவிஷ்ணுவிடம்கேட்டார். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண ஆண்டுதோறும் வரும் தினத்தை ஓணம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருஓணம் வரைக்கும் பத்து நாட்கள் படுவிமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவில் அன்பளிப்புக்கள், உணவு பரிமாற்றங்கள் ஆகியவை சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விளையாட்டு போட்டிகள் ஏதுமின்றி ஓணம் பண்டிகை அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள மொழி பேசும் மக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு வருகின்றன.

மோடி வாழ்த்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். "அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்; நேர்மறை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடையது ஓணம் பண்டிகை, அனைவரின் நல்வாழ்வு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்" என்று மலையாள மொழியில் பதிவிட்டுள்ளார்.
மு.க ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. அன்புக்கும், ஈகைப் பண்புக்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும், கேரள மக்களும் நலமிகு வாழ்வும், அனைத்துவளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. அன்புக்கும், ஈகைப் பண்புக்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும், கேரள மக்களும் நலமிகு வாழ்வும், அனைத்துவளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் இபிஎஸ் வாழ்த்து
ஓணம் பண்டிகையையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
திருவோணம் பண்டிகையின் போது மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் 10 நாட்களுக்கு அரிசி மாவினால் அழகிய கோலமிட்டு அக்கோலத்தை வண்ணப்பூக்களால் அலங்கரித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் மனம் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். இப்பண்டிகையின் போது ஏழை எளிய மக்களுக்கு உணவும், உடையும் வழங்கி ஈகைத் தன்மையின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைப்பார்கள். அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும். அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த திருவோணம் நாளில் அனைவருக்கும் எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரது வழியில் எங்களது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் என். ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய திருவிழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மாகி பகுதி மக்களுக்கும், புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஓணம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சாதி, மத வேறுபாடின்றி மலையாள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை அறுவடை திருநாளாவும், வளமை மற்றும் செழுமையின் அடையாளமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையானது புதுச்சேரி மாநில மக்கள் அனைவரது இல்லங்களிலும் எல்லா வளங்களையும், நலன்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ,புத்தாடை அணிந்து வாசலில் அத்தப்பூ கோலமிட்டு தோரணம் கட்டி மகிழ்ச்சி பொங்க மகாபலி மன்னன் வரவேற்கும் ஓணம் பண்டிகை இன்றளவும் மலையாள மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். மகாபலி மன்னனை வரவேற்கும், அதேவேளையில் இயற்கை அன்னையையும் வணங்கி வரவேற்பது ஓணம் பண்டிகைக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும். அதன்படி ஓணம் பண்டிகை திருநாளில் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழத்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்தியில், ஓணம் பண்டிகை அனைவருக்கும் தேவையான மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தரட்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள துன்பங்களை இத்திருநாள் நீக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், தமிழர்களுடைய ஒட்டுமொத்த வளர்ச்சியில் எவ்விதவேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வரும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துச்செய்தியில் , மக்களை நேசித்த மன்னன் மகாபலி, மக்களை சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தனது வாழ்த்துச்செய்தியில், கேரள மக்கள் ஓணம் பண்டிகையை சாதி, மத வேறுபாடின்றிகொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. ஓணம் எனும் திருவோணத் திருநாளை புத்தாண்டாக கொண்டாடும் மலையாள மக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ தமாகா சார்பில் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துச்செய்தியில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்து கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவம், ஒற்றுமை தழைத்தோங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமக தலைவர் சரத்குமார் தனது வாழ்த்தில், பாரம்பரிய, பண்பாடுமிக்க கேரள மக்களின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கும் வகையில் ஓணம் பண்டிகை சீரும், சிறப்புமாக அமைய என வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications