Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா? கெத்தா இருந்தாங்க 3 பேரும்! ஆனா, களத்துல வெத்தா ஆயிட்டாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில காலம் இருந்தாலும், தமிழக அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளும் தங்கள் கூட்டணியை பெரும்பாலும் இறுதி செய்து, தேர்தல் களத்திற்கு தயாராகி வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் சில கட்சிகள் மட்டும் எந்தப் பக்கம் செல்லுவது, எப்படிப் பயணத்தைத் தொடர்வது என்ற குழப்பத்திலேயே நீண்ட நாட்களாக தத்தளித்து வருகின்றன. அந்தப் பட்டியலில் முக்கியமாக பேசப்படுபவர்கள் ஓ. பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ் மற்றும் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த்.

ஒருகாலத்தில் தமிழகத்தின் மூன்று முறை முதல்வராகப் பொறுப்பேற்றவர் ஓ. பன்னீர்செல்வம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், அவர் மறைந்த பின்னரும் முதல்வர் பொறுப்பை ஏற்ற அனுபவம் கொண்டவர். அரசியலில் இது யாருக்கும் அமையாத வாய்ப்பு.

ஆனால், இன்று அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு, 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே அரசியல் பயணத்தைத் தொடர்கிறார். பாஜக இவரை இயக்குகிறது என்ற பேச்சுகள் இருந்தாலும், அதிமுகவோ, தேசிய ஜனநாயகக் கூட்டணியோ தற்போது ஓபிஎஸ் குறித்து அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

O Panneerselvam Ramadoss Premalatha Vijayakanth Tamil Nadu Assembly Election 2026

ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம்

அதே நேரத்தில், அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய டிடிவி தினகரன், பல்வேறு முரண்பாடுகளுக்குப் பிறகும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அழைத்துவரப்பட்டார். எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டேன் என்று கூறிய தினகரனே, இன்று அதே அணியில் இணைந்திருப்பது, அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதற்கான உதாரணமாக பார்க்கப்படுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டே, பெரியகுளம் அருகே தனது பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைப்பு குறித்து வெளிப்படையான கருத்துகளை முன்வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி

ஒன்றிணைந்தால் வெற்றி உறுதி என்றும், அதற்குத் தானும் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால், இந்த அழைப்புக்கு பதில் சொல்லுவதற்குக் கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக மறுத்தார். கட்சித் துரோகம் செய்தவர் மீண்டும் அதிமுகவில் சேர வாய்ப்பே இல்லை என்ற அவரது அறிக்கை, ஓபிஎஸ்ஸுக்கான கதவுகள் முற்றிலும் மூடப்பட்டுவிட்டதையே உணர்த்தியது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அடுத்ததாக எந்த அரசியல் பாதையைத் தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராமதாஸ் பாமக நெருக்கடி

இதுபோன்றேதே இன்னொரு பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியிலும் நடக்கிறது. ஒருகாலத்தில் வலுவான கட்சியாக இருந்த பாமக, இன்று தந்தை ராமதாஸ் - மகன் அன்புமணி இடையிலான முரண்பாடுகளால் பிளவுபட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பை பெரும்பாலும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அன்புமணி, பாஜக மற்றும் அதிமுக தலைமையுடன் நெருக்கம் காட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பிடித்துவிட்டார். பிரதமர் மோடி கலந்து கொண்ட மேடையில் பாமக சின்னம் இடம் பெற்றதே, இந்த அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்தது. மறுபக்கம், ராமதாஸ் செய்ய முடிந்தது கண்டனம் தெரிவிப்பதுதான்.

திமுக கூட்டணி

இந்தச் சூழலில், ராமதாஸுக்கு எஞ்சியிருப்பது திமுக அணி, தவெக அல்லது தனித்துப் போட்டியிடுவது என்ற மூன்று தேர்வுகள் மட்டுமே. ஆனால், கட்சியே பிளவுபட்டுள்ள நிலையில் தனித்து நிற்பது சாத்தியமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கெனவே விசிக போன்ற கட்சிகள் இருப்பதால், அங்கு பாமகவுக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியே.

பிரேமலதா விஜயகாந்த் திட்டம்

இதேபோல், ஒருகாலத்தில் 'நாளைய முதல்வர்' என பேசப்பட்ட விஜயகாந்தின் தேமுதிகவும் இன்று கடும் அரசியல் நெருக்கடியில் உள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு மக்களிடையே வெளிப்பட்ட அன்பும் மரியாதையும் அளவிட முடியாததாக இருந்தாலும், அந்த உணர்வை அரசியல் வாக்குகளாக மாற்றுவது இப்போது தேமுதிக தலைமையின் முன் நிற்கும் சவால். கூட்டணி குறித்து எந்த அவசரமும் இல்லை என பிரேமலதா கூறினாலும், திமுக, அதிமுக, என்டிஏ என எல்லா பக்கங்களிலும் பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

தவெக

இன்றைய நிலவரப்படி, இந்த மூன்று தரப்புகளுக்கும் எஞ்சியிருக்கும் ஒரே சாத்தியமான பாதை நடிகர் விஜய் தலைமையிலான தவெக என்கிற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், தவெக தரப்பில் இருந்து வரும் மறுப்புகளும், 'அடிப்படை ஆதாரமற்ற செய்திகள்' என்ற விளக்கங்களும், அந்த வாய்ப்பையும் உறுதியற்றதாக மாற்றுகின்றன.

தேர்தல் களம்

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை இந்தக் குழப்பங்கள் தொடருமா, அல்லது வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள்வரை நீடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், அரசியலில் உயரத்தில் இருந்த பல தலைவர்கள் இன்று திசை தெரியாமல் நிற்கும் நிலை, இந்தத் தேர்தல் களம் எவ்வளவு கொடூரமானது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. எங்கே செல்லும் இந்தப் பாதை? என்ற கேள்விக்கான பதில், தேர்தல் நெருங்க நெருங்கத்தான் தெளிவாகத் தெரிய வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+