திமுக கூட்டணியில் முதல் விக்கெட்டாம்.. பாஜகவுடன் இணையுதாம் முக்கிய கட்சி.. கொளுத்தும் எல் முருகன்
சென்னை: தமிழக அரசியல் கட்சிகளிடம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி ரேஸ் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், விரைவில் திமுக கூட்டணி உடையும். அங்குள்ள ஒரு கட்சி மிக விரைவில் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளது. அந்தக் கூட்டணி சந்தித்த 4 தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

மறுபக்கம் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து திமுகவுக்கு எதிராக போட்டியிடுகிறார்கள். அந்தக் கூட்டணியில் அதிகளவு கட்சிகளை இணைத்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மத்திய பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழ்நாடு வரத்தொடங்கிவிட்டார். இதுதவிர விஜய் தலைமையிலான தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் திமுகவை எதிர்த்து வருகிறார்கள்.
திமுகவை பொறுத்தவரை பலமான கூட்டணி தான் அவர்களுக்கு வெற்றியை தேடி கொடுக்கிறது. அவர்களுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்குவதுடன், திமுக கூட்டணியை பலவீனப்படுத்தினால் தான் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் திமுக கூட்டணி உடையும். அதில் இருந்து ஒரு கட்சி விரைவில் எங்கள் கூட்டணியில் இணையும் என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான நிர்வாகத்தில் 11 வருட ஆட்சியை நிறைவு செய்து 12 ஆம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம். ராகுல் காந்தி கண்ணை கட்டி கொண்டுள்ளார். அவர் கண்களை திறந்து பார்க்க வேண்டும். அவர்களின் ஆட்சியில் நாடு எப்படி ஊழலால் சீர்கெட்டிருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
பாஜக ஊழலற்ற சிறந்த ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதை மக்கள் கண்கூடாக பார்க்கிறார்கள். மணிப்பூரில் அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூருக்கு தனி கவனம் செலுத்தி நேரடியாக கண்காணிக்கிறார். திக காரர்கள் என்றாலே கலவரத்தை உருவாக்குபவர்கள் தான். அவர்கள் அதில் தீவிரமாக இருப்பதால் மற்றவர்களையும் அப்படிப் பார்க்கிறார்கள். எங்கள் கூட்டணியை பற்றி தேசிய தலைவர்கள் சரியாக முடிவு செய்து, அதை சரியான நேரத்தில் அறிவிப்பார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திமுக கூட்டணி சலசலத்து போயுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனே அந்தக் கூட்டணியில் இருப்பாரா என்று தெரியவில்லை. அவரே இரட்டை மனநிலையில் இருக்கிறார். இந்தக் கூட்டணிக்கு போகலாமா. அல்லது வேறு கூட்டணிக்கு போகலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் உள்ள இண்டி கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று திருமாவுக்கு நன்கு தெரியும். அதனால் தான் அவர் தடுமாற்றத்துடன் பேசுகிறார். எங்கள் கூட்டணி வலிமையாக இருப்பதால் தான் திமுகவினர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். திமுக நிர்வாகிகளுக்கு பயம் இருக்கிறது. அவர்களின் ஆட்சிக்கு மக்களிடம் விரக்தி ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணி உடையும். திமுக கூட்டணியில் இருந்து கூட பல கட்சிகள் வெளியே வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கூட்டணியில் நிலைத்தன்மை உள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் எல்லாம் முடிவாகிவிடும். அங்கிருந்து எங்கள் கூட்டணிக்கு வர ஒருவர் தயாராக உள்ளார். நாங்கள் அவரிடம் பேசிவிட்டோம். பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி குறித்து எல்லாரும் தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
அது யார் என்று நீங்களே கூட அனுமானிக்கலாம். ஆனால் அரசியலில் எல்லாவற்றையும் உடனடியாக சொன்னால் எதிர்பார்ப்பு இருக்காது. திமுக கூட்டணியில் உள்ள என் சகோதரர் தான் எங்கள் கூட்டணிக்கு வரவுள்ளார். கூட்டணியை பொறுத்தவரை எது வேண்டுமானாலும் நடக்கலாம். பேசியுள்ளோம். விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் இருந்துள்ளார்.
வாஜ்பாய் காலத்தில் எங்களின் கூட்டணியில் இருந்துள்ளார். எல்லாம் காலத்தின் சூழ்நிலை தான். திமுகவினர் தோற்பது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் ஜெயிக்கின்றன கூட்டணி பக்கம் தான் அரசியல் கட்சிகளும், மக்களும் வருவார்கள். இங்கு ஜெயிக்கிற குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications