ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0.. சிக்கிய 403 வியாபாரிகள்.. சொத்துகள் முடக்கம் - அதிரடி காட்டிய காவல்துறை!
சென்னை : தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0ல் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை நடத்திய ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0, 2.0 ஆகிய நடவடிக்கைகளில், 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
எனினும், கஞ்சா புழக்கம் தொடர்ந்து வந்த நிலையில், தமிழக காவல்துறை கஞ்சா வேட்டை 3.0-ஐ நடத்தியது. தமிழ்நாடு முழுக்க நடந்த இந்த கஞ்சா தடுப்பு வேட்டையில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா புழக்கம்
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா விற்பனையும், கஞ்சா பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதிகளவிலான கஞ்சா புழக்கம் இளைஞர்கள் மட்டுமல்லாது மாணவர்களையும் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளது. இது குறித்த புகார்களும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

கஞ்சா வேட்டை 2.0
அதன்படி தமிழகம் முழுவதும் சென்ற ஆண்டு முதல் 'ஆபரேஷன் கஞ்சா' எனும் அதிரடி கஞ்சா வேட்டை நடவடிக்கையை மேற்கொண்டது தமிழக காவல்துறை. ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 என்ற காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளின் போது 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்கள் பயன்படுத்திய 1, 743 இருசக்கர வாகனங்களும், 148 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர் நடவடிக்கை
அதேபோல், 36,875 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு, 521 டன் குட்கா மற்றும் அவர்கள் பயன்படுத்திய 618 இரு சக்கர வாகனங்களும் 487 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் 4,023 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 616 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கஞ்சா வேட்டை 3.0
இதன் தொடர்ச்சியாக கஞ்சா வேட்டை 3.0 தமிழ்நாடு முழுவதும், கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 மூலம் கடந்த சில நாட்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தும் குற்றச் செயலின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொத்துகளை முடக்கி அறிக்கை அனுப்புங்க
மேலும், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மாநகர காவல் ஆணையர்களுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய அறிவுறுத்தல்களைக் கொடுத்துள்ளார். கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துகளையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications