கூட்டத்தில் ஒலித்த 2 குரல்கள்.. ‘திடீர் ஷாக்’.. அதிர்ச்சியோடு பார்த்த எடப்பாடி - ஸ்ட்ரைட்டா மெசேஜ்!
சென்னை : உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணிக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி உள்ளதாகவும், ஆலோசனைக் கூட்டத்தில் ஈபிஎஸ் முன்னிலையியே வாக்குவாதம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வெளியான நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.
முன்னாள் அமைச்சர்கள் பலர் பங்கேற்ற ஆலோசனையின்போது, இரு வேறு கருத்துகள் எழுந்ததாகவும், இதனால், கூட்டத்திலேயே லேசான வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே உடல் நலக் குறைவால் சோர்வடைந்திருந்த ஈபிஎஸ், இதனால் மிகுந்த அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
அடேங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்லயே - டெல்லிக்கு ஓபிஎஸ் அனுப்பப்போகும் கடிதம்.. எடப்பாடிக்கு "செக்!?"

திசை மாறிய தீர்ப்பு
பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23க்கு முன்னர் இருந்த நடைமுறையே தொடரும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியின் கூட்டில் சச்சரவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
தீர்ப்பு தனக்கு சாதகமான கிடைத்த நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். பழைய கசப்புகளை மறந்து செயல்படுவோம், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் ஓபிஎஸ். ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்தார்.

அவசர ஆலோசனை
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அன்றே, தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இரவு வரை பல்வேறு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சில முக்கிய நிர்வாகிகள், தீர்ப்பு நமக்கு பாதகமாக வந்துள்ளதால், இப்போதைக்கு ஓபிஎஸ் தரப்புடன் இணக்கமாகச் செல்லலாம், இதற்கு மேலும் நீண்டகாலத்திற்கு கட்சி குழப்பத்தோடு இருப்பது தொண்டர்களை சோர்வடையச் செய்யும் என வலியுறுத்தியுள்ளனர்.

பாய்ந்த ஆதரவாளர்கள்
அதற்கு, ஈபிஎஸ் ஆதரவாளர்களான மற்றொரு தரப்பினர் இணைந்து செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, எப்படி இப்படி பேசுகிறீர்கள் எனப் பாய்ந்துள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். நமக்குத்தான் கட்சியில் பலம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டும் பின்வாங்குவது தேவையில்லாதது எனக் காட்டமாகக் கூறியுள்ளனர்.

கருத்து முரண்
உடனே, முன்பு ஓபிஎஸ் தரப்புடன் இணக்கமாகச் செல்லலாம் எனக் கூறியவர்கள், ஓபிஎஸ் சொல்வதைக் கேட்க வேண்டும் எனச் சொல்லவரவில்லை, பொதுக்குழு கூடும்போது எப்படியும் நம் பலத்தை நிரூபித்து, ஒற்றைத் தலைமையைக் கொண்டு வரலாம். அதுவரை கட்சியின் எதிர்காலத்திற்காக கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்வது தான் நல்லது எனத் தெரிவித்துள்ளனர்.

மோதல் போக்கு
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ் தரப்பினருக்குள் ஏற்படுத்திய தாக்கம், எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக் கொடுத்துள்ளது. ஓபிஎஸ்ஸுடன் இணைவது தொடர்பாக இரு வேறு கருத்துகள் தமது அணிக்குள் ஏற்பட்டதைக் கவனித்த எடப்பாடி பழனிசாமி, இந்த தீர்ப்பால் நமக்கு எந்த பாதகமும் ஏற்படவில்லை, அதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

உடம்பு சரியில்லங்க
தீர்ப்பு நாளன்று பூச்சி கடித்ததால் வீக்கம் ஏற்பட்டு அவதிப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து நாள் முழுவதும் அடுத்தடுத்து ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதால், சோர்வடைந்துள்ளார். பின்னர் உடல்நலம் சரியில்லை என்று கூறியே, ஆதரவாளர்கள் இடையேயான கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை அனுப்பி வைத்தாராம் எடப்பாடி பழனிசாமி.

பிரஸ் மீட்
அதன்பிறகே, நேற்று காலை மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு, ஒரே முடிவாக, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது என்றும், ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்பை நிராகரிப்பது என்றும் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இரவு வரை நடந்த ஆலோசனையில் ஏற்பட்ட மோதல் போக்கால் குழம்பியிருந்த எடப்பாடி பழனிசாமி, காலையில் பிரஸ் மீட்டில் ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்து, ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமல்லாது, தனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஸ்ட்ரைட்டாக மெசேஜ் பாஸ் செய்துள்ளார் என்கிறார்கள் ர.ரக்கள்.