எல்லா பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்? எடப்பாடி வைத்த கோரிக்கை! டக்குனு எழுந்த சிவசங்கர்! என்ன சொன்னார்
சென்னை:தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் விவாதத்தில் மகளிர் இலவச பேருந்து பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய கோரிக்கைகளை விடுத்தார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளே அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில பகுதிகளைத் தவிர்த்துப் பேசியது சர்ச்சையானது.
அப்போது ஆளுநர் பேச்சு அவை குறிப்பில் ஏறக் கூடாது என்றும் அரசு தயார் செய்த உரையே அவை குறிப்பில் ஏற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அப்போதே தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

தமிழ்நாடு சட்டசபை
அப்போது தேசிய கீதம் ஒலிக்கும் முன்னரே ஆளுநர் ரவி அங்கிருந்து வெளியேறினார்.. இது மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இது ஒரு பக்கம் இருக்க எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரமும் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி தரப்பினரின் தொடர் கோரிக்கைக்குப் பின்னரும் இருக்கை மாற்றப்படாததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டசபையில் அருகருகே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கத் தமிழ்நாடு சட்டசபையில் அதன் பிறகு தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து நகரப் பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என்று முதலில் அறிவித்ததாக கூறிய அவர்.. அதன் பின்னர் இப்போது பிங்க் நிற பேருந்துகளில் மட்டுமே கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்று சொல்லப்படுவதாகத் தெரிவித்தார்.

இலவச பயணம்
மேலும், அனைத்து விதமான நகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்குப் பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், "நகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் இலவசமாகவே பயணித்து வருகிறார்கள்.. அவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.. பெண்கள் பேருந்துகளை எளிதாக அடையாளம் காணவே பிங்க் நிறம் அடிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

ஆய்வு செய்ய தயார்
தொடர்ந்து பேசிய அவர், "பேருந்துகள் தொடர்ச்சியாக எப்சி செல்லும். இப்படி எப்சி செல்லும் போது, படிப்படியாகப் பேருந்துகளில் பிங்க் நிறம் அடிக்கப்படும்.. பெண்கள் அடையாளம் காண எளிமையாக்கவே இந்த பிங்க் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. இலவச பேருந்து சேவை அறிவிக்கப்பட்ட பிறகு பேருந்துகளில் பெண்களின் பயணம் என்பது 24% அதிகரித்து 64%ஆக உள்ளது.. இப்போதும் அனைத்து (சாதாரண) பேருந்துகளிலும் இலவசம் தான். எளிதாக அடையாளம் காணவே பிங்க் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவருடன் சேர்ந்து ஆய்வு செய்யவும் தயார்" என்று அவர் தெரிவித்தார்.

இலவச பேருந்து பயணம்
தமிழ்நாடு முதல்வராக முதல்முறையாகப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் கொண்டு வந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று பெண்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம் என்பது. இதன் மூலம் அனைத்து சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.. சாதாரண பேருந்துகளில் தொலைவில் இருந்தும் எளிதாக அடையாளம் காணப் பேருந்துகளுக்கு பிங்க் நிறம் அடிக்கப்பட்டது. இத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் சுமார் 800 முதல் 900 வரை சேமிக்கப்படுவதாகச் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications