'சக்சஸ் பண்ணனும்'.. எடப்பாடிக்கு எதிராக எடுத்த அஸ்திரம்.. சென்னை ஓட்டலில் ஓபிஎஸ் + டிடிவி!
சென்னை : கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு எதிராக ஒன்று சேர்ந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதற்காக சென்னை ஓட்டலில் நடந்த சந்திபில் எடுத்துள்ள புதிய வியூகம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு எதிரான வழக்கை விரைந்து திமுக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆகஸ்ட் 1 - ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

இதற்கு ஒத்துழைப்பதுடன் ஆர்ப்பாட்டத்தில் அமமுக கலந்து கொள்ளும் என அறிவித்திருந்தார் அமமுக பொதுச்செயலாளர் தினகரன்..இந்த நிலையில், ஆர்ப்பாட்டதை சக்சஸாக நடத்துவது குறித்து ஓபிஎஸ் ஆதரவு அதிமுகவினரும், அமமுகவினரும் சென்னை அசோகா ஹோட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல விசயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா குடியிருந்த கோயிலான கொடநாடு பங்களாவில் 24-04-2017 அன்று நுழைந்த ஓர் அரக்கர் கூட்டம் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி திரு. ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து, மற்றொரு காவலாளி திரு. கிருஷ்ணபகதூர் என்பவரை படுகாயப்படுத்தி, ஒரு கொள்ளை சம்பவத்தை அங்கே நிகழ்த்தியது.
இதன் தொடர்ச்சியாக மாண்புமிகு அம்மா அவர்களின் கார் ஓட்டுநராக இருந்த திரு. கனகராஜ், கொடநாடு பங்களாவில் கணினி பொறுப்பினை வகித்து வந்த திரு. தினேஷ், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட திரு. சயான் என்பவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இந்தக் கொடூரங்கள் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலைக்கும், கொள்ளைக்கும், மர்ம மரணங்களுக்கும் காரணமான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவோம் எனக்கூறிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இது தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த வழக்கினை விரைந்து நடத்தாதது வியப்பை அளிக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அம்மா அவர்கள் வாழ்ந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
எனவே, கொடநாடு கொலை, கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மர்ம நிகழ்வுகள் குறித்த வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஏற்கெனவே அறிவித்தபடி, 01-08-2023 - செவ்வாய்க்கிழமை அன்று காலை 10-30 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், கழக உடன்பிறப்புகள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே ஓ பன்னீர்செல்வம் அறிவித்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக கலந்து கொள்ளும் என டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதற்காக இன்று சென்னை அசோகா ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசினார்கள். இந்த மீட்டிங்கில் பல விஷயங்கள் விவாதிக்கப்பபட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தேனியில் நடக்கும் ஆர்பாட்டத்தில் ஒன்றாக பங்கேற்பார்கள் என தெரிகிறது. கொடநாடு வழக்கு விவகாரத்தை கையில் எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க இருவரும் திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார்கள்.
அடுத்த கட்டமாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு நெருக்கடி அளிக்க காய் நகரத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இதையொட்டித்தான் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு சவால் விடும் வகையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் ஆகிய மூவருமே அரசியல் ரீதியாக பல்வேறு காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதால் அதிமுகவில் பரபரப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications