"மாறுபட்ட கோணம்".. நிறம் மாறும் லஞ்ச ஒழிப்புத்துறை.. ஓபிஎஸ் கேஸில் ஹைகோர்ட் வேதனை.. கவனிக்கும் அதிமுக
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விடுதலையான நிலையில் இந்த வழக்கை, இன்று தாமாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக, ஓ. பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். "லஞ்ச ஒழிப்புத்துறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு நற்சான்று கொடுத்துள்ளது..ஆட்சி மாற்றத்திற்கேற்ப லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல நிறம் மாறுகிறது" என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக, ஓபிஎஸ் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது... அதாவது, கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு பதியப்பட்டது.
ஓபிஎஸ், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ஓபி ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்ததாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.

விசாரணை: இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை கோர்ட், ஓபிஎஸ் உள்ளிட்டோரை கடந்த 2012ம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது... ஆனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட் தாமாகவே முன்வந்து (சூ-மோட்டோ) வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
இப்படித்தான், திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளிலும், அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மறுபடியும் அதே வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது ஹைகோர்ட்..
அதுமட்டுமல்ல, பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை இதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. திமுக அமைச்சர்களையடுத்து, ஓபிஎஸ்ஸும் இந்த லிஸ்ட்டில் இப்போது வந்துள்ளார்..
மீண்டும் செக்: ஏற்கனவே முடிந்துபோன விவகாரத்தை, அதிலும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட வழக்கை, மறுபடியும் விசாரணைக்கு எடுத்துள்ளது, தமிழக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எடப்பாடி தரப்பும் உற்று கவனித்து வருகிறது. காரணம், கொடநாடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும்நிலையில், எடப்பாடிக்கான சிக்கல்களும் கூடிவருவதாக தெரிகிறது.
இதனிடையே "ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீதெல்லாம் ஏன் வழக்குகள் பாயவில்லை? ஓபிஎஸ் திமுகவின் B டீமாக செயல்படுகிறார்" என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்த நிலையில், ஓபிஎஸ் மீதும், வழக்குகள் இன்று திரும்பியுள்ளது..
விசாரணை: அதுமட்டுமல்ல, இதுசொத்துக்குவிப்பு வழக்கு என்பதால், விஷயம் சீரியஸாகவே போக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. எம்பி தேர்தல் நெருங்கி வரும்நிலையில், ஓபிஎஸ் மகன்கள் வரை விசாரணைக்கு ஆஜராக நேரிடும் சூழலும் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, அதிமுக விவகார வழக்குகள் தொடர் பின்னடைவுகளை ஓபிஎஸ் சந்தித்து வரும்நிலையில், நீதிமன்றம் மூலம் இன்னொரு செக் வைக்கப்பட்டுள்ளது, ஓபிஎஸ் கூடாரத்தையே வெலவெலக்க வைத்து வருகிறது.
இந்த வழக்கை ஏன் இப்போது, மறுபடியும் கிண்டி எடுக்க வேண்டும்? அதிலும் ஏன் இன்றைக்கே விசாரிக்க வேண்டும்? இவ்வளவு நாள் இல்லாமல், இந்த விஷயத்தில், நீதிமன்றம் அவசரம் காட்டுவதற்கு என்ன காரணம்? என்றெல்லாம் தெரியவில்லை. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில், இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
பதிலளிக்க உத்தரவு: நேற்று அறிவித்தபடியே, இன்று ஓபிஎஸ் வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக, ஓ. பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.. அத்துடன், ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல் நிறம் மாறுவதாகவும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கேலிக்கூத்து: குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. பேசாமல், சட்டம் எம்பி., எம்எல்ஏக்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். அதிகார வரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன..
அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை அறிக்கையை நீதிமன்றத்துக்கு பதில் அரசிடம் அளித்துள்ளது... சபாநாயகர் நீதிபதிபோல் செயல்பட்டிருக்கிறார்" என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications