ஓபிஎஸ் விட்ட “லிஸ்ட்”.. பழனிசாமிக்கு “டுவிஸ்ட்” -5 ஆக பிரிந்த சேலம்! ஈபிஎஸ் பதவியில் “எடப்பாடி”காரர்
சென்னை: சேலம் மாவட்ட அதிமுகவை 5 மாவட்டங்களை பிரிப்பதாக அறிவித்து இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி வகித்த மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடியை சேர்ந்த வேறொரு நபரை நியமனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "நிர்வாக வசதியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் கள்ளக்குறிச்சி வடக்கு என இரண்டு மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்."

கள்ளக்குறிச்சி நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக க.வேங்கையன் அவர்களும், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தின் அதிமுக செயலாளர் D.N.பாஸ்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சேலம் மாவட்டம்
"இதேபோன்று, சேலம் மாநகர், சேலம் புறநகர் எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு, சேலம் மாநகர், சேலம் புறநகர் மேற்கு, சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மத்திய மற்றும் சேலம் புறநகர் வடக்கு என ஐந்து மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5 மாவட்டங்கள்
இதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாநகர் மாவட்டத்தின் செயலாளராக N. தினேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஈபிஎஸ் பதவி
எடப்பாடி, சங்ககிரி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் புறநகர் மேற்கு மாவட்டக் அதிமுக செயலாளராக எடப்பாடி P.A. இராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வகித்து வரும் பதவியாகும். இதேபோல் ஆத்தூர், கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சேலம் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக A.பெரியசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய நிர்வாகிகள்
வீரபாண்டி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் புறநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்கு M.ஜெய்சங்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேட்டூர், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சேலம் புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்கு N.ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications