அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: விதிகள் திருத்தம்- உடனே தடை விதியுங்க.. ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு தடை கோரி வாதிட்டு வருகிறது ஓபிஎஸ் தரப்பு.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் சாதாரண தொண்டன் போட்டியிட முடியாத அளவுக்கு விதிகள் திருத்தப்பட்டுள்ளன; ஆகையால் இந்த தேர்தலுக்கு உடனே தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணியினர் வாதங்களை முன்வைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று ஞாயிற்றுக்கிழமயான விடுமுறை நாளிலும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது அதிமுக ஓபிஎஸ் அணி முன்வைத்த வாதங்கள்:
- ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை
- அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலில் கட்சி அடிப்படை விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன
- அதிமுக பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினர், 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகியாக இருக்க வேண்டும் என்பது தகுதி; இந்த விதி திருத்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண தொண்டன் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

- வெள்ளிக்கிழமை மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 36 மணிநேரத்தில் 20 மா.செ.க்கள் முன்மொழிதல், வழிமொழிதல் என அறிவிக்கப்பட்டிருப்பது எப்படி சாத்தியமாகும்? சனிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி ஞாயிறு வேட்பு மனு தாக்கல் நிறைவு என அறிவித்துவிட்டனர்..
- அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தல் அவசர கதியில் நடத்தப்படுவதால் தடை விதிக்க வேண்டும்.
- அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்படவில்லை
- அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து என்ற தீர்மானத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
- அதிமுகவில் ஜெயலலிதான் நிரந்தர பொதுசசெயலாளர் என்ற விதி காலாவதியான நிலையில் பொதுச் செயலாளர் தேர்தலை எப்படி நடத்த முடியும்?

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பிரபாகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேலும் தமது வாதத்தில் கூறியதாவது: ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பொறுமையாக விசாரிப்பதில் எங்களுக்கு பாதகம் இல்லை. தேர்தலை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒருவருக்காக மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பையும் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என 2017 ல் அறிவித்து விட்டு, கட்சி கொள்கைக்கு எதிராக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த போது தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை மட்டுமே ஏற்றுக் கொண்டது. தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவில்லை.அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், சாதாரண தொண்டனும் கட்சித் தலைமைக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் மொத்தமாக 70 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தர வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது. 7 உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும், கட்சி விதிகளுக்கு எதிராக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1 கோடியே 55 லட்சம் பேர் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். அதில், 327 முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது சட்டவிரோதமானது. தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின் படி 7 நாட்கள் நோட்டீஸ் வழங்காமல் கடந்த 17 ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எப்படி பொதுவானதாக கருத முடியும். வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்தல் அறிவிக்கப்பட்டது சட்ட விரோதம். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டதை எதிர்த்த வழக்க நிலுவையில் இருக்கம் போது எப்படி பொதுச்செயலாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிட முடியும்.ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 2026 வரை பதவியில் தொடரலாம். இவ்வாறு வாதிடப்பட்டது.












Click it and Unblock the Notifications