பிரஸ் மீட்டில் புகழேந்தி காட்டிய போட்டோ.. ‘கையெழுத்து போட்டது யாரு?’ - எடப்பாடி பழனிசாமிக்கு சவால்!
சென்னை : பண்ருட்டி ராமச்சந்திரனை பற்றி தரக் குறைவாக பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவுடன் அரசியல் பயனத்தை தொடங்கியவர், எம்ஜிஆர் உடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பார்த்து தரக் குறைவாக பேசுவதா என சில புகைப்படங்களை காட்டி எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார் புகழேந்தி.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது புகழேந்தி, ஓபிஎஸ்ஸை மேடைகளில் விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

திரும்பிய பண்ருட்டியார்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு சாதகமான பலனைப் பெற ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமசந்திரனை சந்தித்துப் பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆலோசனைக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

கோபமடைந்த எடப்பாடி
இதையடுத்து, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.மின்கட்டண உயர்வுக்கு எதிராக செங்கல்பட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்தபோதே ஜெயலலிதாவை விமர்சித்தவர். அங்கிருந்து பாமகவுக்கு போனார், பின்னர் பாமகவை மறந்துவிட்டு தேமுதிகவுக்கு போனார். அந்தக் கட்சியை மழுங்கடித்து விட்டார். தற்போது நமக்கு அறிவுரை சொல்கிறார். உங்கள் அறிவுரை எதுவும் வேண்டாம். ஒரு கிளை கழக செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட உங்களுக்கு இல்லை. " எனக் கடுமையாக விமர்சித்தார்.

போட்டோவை காட்டிய புகழேந்தி
இந்நிலையில் நேற்று ஓபிஎஸ் இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரோடு இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, எம்ஜிஆர், ஜெயலலிதாவே ஆலோசனை கேட்ட தலைவரைத்தான் நீங்கள் தகுதி இல்லை எனப் பேசுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்
மேலும் பேசிய புகழேந்தி, "பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவுடன் அரசியல் பயனத்தை தொடங்கியவர், எம்ஜிஆர் உடன் நெருங்கிப் பழகியவர். அவர் ஒரு பழம்பெரும் தலைவர் என்பதற்கு என் கையில் உள்ள படம் தான் சாட்சி. அவர் ஒபிஎஸ்ஸிக்கு ஆதரவு அளித்துள்ளார். இதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் அறிவுரை தேவையில்லை என்கிறார். அவரைப் பார்த்து தரக் குறைவாக பேசுவதை எடப்பாடி பழனிசாமி தவிர்க்க வேண்டும். பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றி எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

ராஜினாமா செஞ்சுட்டு வாங்க
மேலும் பேசிய அவர், "கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர்களுக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இணைந்து கையெழுத்து போட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட ஏ ஃபார்ம், பி ஃபார்மை வைத்துதான் 65 இடங்களில் ஜெயித்தோம். எனவே அதையெல்லாம் ராஜினாமா செய்யுங்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா? ஒரு இடத்தில் நின்று ஜெயித்து விடுங்கள் பார்க்கலாம்.

அங்கேயும் நாங்க தானா?
எடப்பாடி பழனிச்சாமி விலைவாசி உயர்வுக்கு எதிரான கூட்டத்திலும் ஓபிஎஸ்ஸை பற்றிதான் பேசி வருகிறார். அரசாங்கத்தை விமர்சிப்பதை விட்டுவிட்டு எங்களை எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருகிறார்கள். கட்சியின் உண்மையான தொண்டர்கள் அவர் பக்கம் இல்லை.

கட்சி நடத்த முடியாது தம்பி
கண்ட இடத்தில் மேடை போடுவது, ஓபிஎஸ் பற்றி தரக் குறைவாகப் பேசுவது இதுபோன்ற செயல்களை மட்டும் தான் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் செய்யத் தெரியும். ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டே கிடையாது. ஒவ்வொருத்தராக ஜெயிலுக்குப் போகப் போகிறீர்கள். ஜெயிலுக்கு போனால் அங்கிருந்து கட்சி நடத்த முடியாது தம்பி." என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications