ராஜீவ் காந்தி+கீழ்பாக்கம் மருத்துவமனைகளில் சேவை.. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: சென்னை மாநில கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. கைதான மாணவர்கள் ராஜீவ் காந்தி மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேவையாற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அரசு கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் மோதல் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணையில் நீதிமன்றம் மாணவர்களின் நடவடிக்கை குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் வீட்டு வேலை செய்துதான் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். ஆனால், மாணவர்கள் அடிதடி போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். மட்டுமல்லாது ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் நல்ல வேளையாக விமானத்தில் பயணம் செய்யவில்லை. செய்திருந்தால் அங்கும் கலவரம் வெடித்திருக்கும் என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் சேவை செய்ய சொல்லிவிட்டு ஜாமீன் வழங்கப்பட்டுவிடுவதாக ஒரு கண்ணோட்டம் இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, கொலை செய்யப்பட்ட மாணவரின் பெற்றோர் நிலையை புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளில் மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கல்லூரிகளின் மாணவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன என்கிற விவரத்தை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்த விவரத்தை காவல்துறை தாக்கல் செய்திருந்தது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் சென்னைக் கல்லூரி மானவர்கள் மீது மொத்தம் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 33 வழக்குகள் ரயில்வே போலீசார் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா 4 மாணவர்களுக்கு நிபந்தைனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது 2 மாணவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை சேவையாற்றவும், மற்ற 2 மாணவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இதேபோல தினமும் சேவையாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications