ஜூலை 27க்கு பின் டாஸ்மாக்கில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. அமைச்சர் விக்னேஷ் அப்டேட்
சென்னை: டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தவெக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், தற்போது சில இடங்களில் ரூ. 10 க்கு பதிலாக ரூ. 5, 3 என வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன, ஜூலை 27-க்கு பிறகு இதுதொடர்பாக புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதற்கான பல கட்ட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஒரு மாதமாக காவல்துறை போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது.

கடந்த மே 10 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை 2,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,845 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,579 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து 27 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10,02,379 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹெராயின், மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு எந்தவித சமரசமும் இன்றி போதை இல்லா தமிழகம் உருவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடுத்த தலைமுறை ஆரோக்கியமான தலைமுறை உருவாக இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆட்சியில் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டிருந்ததை இன்னும் வாங்குகின்றனர். இப்பொழுது பல இடங்களில் அது குறைந்து இருக்கின்றது. இப்போது 5 ரூபாய், மூன்று ரூபாய் என வாங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். 27 ஆம் தேதிக்கு பின்பு வேறு ஒரு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
இந்த துறையை மட்டும் எல்லோரும் மோசமாக நினைக்கிறார்கள். இந்த துறையை மாற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பேசப்பட்ட ரெஸ்ட்ரோபாரை மட்டும் யாரோ சொல்லி இருக்கின்றனர். பெட்ரோ பேக் மூலம் மது விற்பனை கொண்டுவர முயன்றபோது ஃப்ரூட்டி பாக்ஸ் போல கவர்ச்சியாக இருப்பதால் குழந்தைகளுக்கு அதன் மீது ஆர்வம் வரும் என்றார்கள். இப்போது அதற்கு மாற்று வழியைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம்.
எல்லாருக்கும் எல்லாம் சரிசமமாக கொடுப்பதற்காக திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறோம். இரண்டு பேர் மூன்று பேரிடம் மட்டும் இல்லாமல் அனைவருக்கும் ஜனநாயக அடிப்படையில் இருப்பது சரியாக இருக்கும். வெள்ளலூர் பேருந்து நிலையப் பணி விரைவில் முடிவடையும். குப்பைக் கிடங்கு பிரச்சனையும் அடுத்த ஆண்டுக்குள் சரி செய்யப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
