நடிகர் விவேக்கின் பிறந்தநாளில் முதல்வர் விஜய்யை சந்தித்த மனைவி அருள் செல்வி.. கோரிக்கை நிறைவேறுமா?
சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் 66-வது பிறந்த நாளான இன்று, அவருடைய மனைவி அருட்செல்வி முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசி இருப்பது கவனம் பெற்று வருகிறது. விவேக் உயிருடன் இருந்தபோது எந்த விஷயத்துக்காக அதிகம் உழைத்தாரோ அந்த மரம் வளர்க்கும் பணியை அவருடைய மறைவுக்கு பிறகு தொடர்ந்து முன்னெடுத்து வரும் அருட் செல்வி, தற்போது கிரீன் கலான் திட்டத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு முதல்வர் விஜய் கொடுத்த உறுதி தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்தவர் விவேக். ஆனால் திரையில் சிரிக்க வைத்ததை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்பதில் அவருக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற விஷயங்களில் அவர் காட்டிய அக்கறை சாதாரணமானது கிடையாது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவுறுத்தலால் 2010 ஆம் ஆண்டு கிரீன் கலாம் என்ற மரம் நடும் திட்டத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

அப்துல் கலாம் கொடுத்த ஊக்கத்தால் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதையே தனது இலக்காக விவேக் வைத்திருந்தார். இதற்காக ஸ்கூல், காலேஜ், பொது இடங்கள் என பல இடங்களுக்கு சென்று மரக்கன்றுகளை நட்டதோடு மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார். திரைப்படங்களில் கூட கிடைக்கிற கேப்பில் சமூகம் அவலங்களை பற்றி சொல்வது, சமூகத்திற்கு தேவையான அட்வைஸுகளை கொடுப்பது என அவருடைய பாணியே வித்தியாசமாக இருந்தது.
விவேக் மறைந்த போது அவருடைய ஒரு கோடி மரங்கள் நடும் கனவு முழுமை அடையாமல் இருந்தது. ஆனால் அவர் விட்டு சென்ற அந்த பணியை அப்படியே கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அவருடைய மனைவி அருட்செல்வி கலாம் திட்டத்தின் மூலம் விவேக்கின் சுற்றுச்சூழல் கனவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார்.
விவேக் மனைவி பேட்டி
இந்த நிலையில் தான் விவேக்கின் 66-வது பிறந்த நாளான நவம்பர் 19ஆம் தேதி அருட்செல்வி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமல்லாமல் விவேக் தொடங்கிய கிரீன் கலாம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான முக்கியமான சந்திப்பாகவும் அமைந்துள்ளது. அப்போது கிரீன் கலாம் திட்டத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், எதிர்காலத்தில் இதை இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் முதல்வரிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.
தமிழக அரசு சப்போர்ட்
அரசு தரப்பில் கூடுதல் உதவியும் ஆதரவும் கிடைத்தால் இந்த திட்டத்தை இன்னும் வேகமாகவும், விரிவாகவும் செயல்படுத்த முடியும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் அருள் செல்வி, இன்றைய சந்திப்பு குறித்து மகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார். "விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவரை முதல் முறையாக சந்தித்து இருக்கிறேன். கிரீன் கலாம் திட்டம் குறித்து எடுத்துச் சொன்னபோது மிகவும் அன்பாக கேட்டுக் கொண்டார். மேலும் இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்று இதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து தருவதாகவும் முதல்வர் உறுதி அளித்து இருக்கிறார்." என்று கூறியிருக்கிறார்.
விவேக்கின் பிறந்தநாள்
அதோடு, "விவேக் ஆரம்பித்த ஒரு நல்ல முயற்சி அவருடைய மறைவுக்கு பிறகும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்றும் அதற்கு அரசு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றும் அருள்செல்வி பேசி இருந்தார். மேலும் முதல்வர் சந்திப்பின்போது அவர் தன்னிடம், "தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் நலம் குறித்து அன்பாக கேட்டுக் கொண்டார். நான் அவரிடம் விவேக் மட்டும் இப்போ இருந்திருந்தால் அவருக்கு இன்று 66-வது வயதாகி இருக்கும் என்று சொன்னேன். அதற்கு முதல்வர் சிரித்துக்கொண்டார்" என்று பெருமையாக அருட்செல்வி பேசியிருக்கிறார்.
விவேக் கனவு
மொத்தத்தில், இப்போது விவேக் நம்முடன் இல்லை. ஆனால் அவர் ஆரம்பித்து கிரீன் கலாம் திட்டமும், மரம் வளர்க்க வேண்டும் என்று அவருடைய எண்ணமும் இன்னும் உயிரோடு இருக்கிறது. ஒரு கலைஞராக அவர் சம்பாதித்த புகழைத் தாண்டி இயற்கைக்காக அவர் செய்த புண்ணியம் தான் நீண்ட காலத்துக்கும் நினைவில் இருக்கும். அந்த பணியை தனது கணவரின் நினைவாக அருட்செல்வி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம்.
விவேக் இருந்தபோது அவருடன் இணைந்து மரம் நடும் பணிகளில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமும் இந்த முயற்சியை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். தற்போது முதல்வர் விஜய்யும் அரசு உதவி செய்வதாக உறுதி அளித்திருப்பதால் கிரீன் கலால் திட்டம் அடுத்த கட்டத்துககு செல்லும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. விவேக் கண்ட ஒரு கோடி மரங்கள் நடும் கனவு ஒருநாள் நினைவாக வேண்டும் என்பது அவரை நேசிக்கும் ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது



Click it and Unblock the Notifications
