அமைச்சராக இருந்தால் என்ன? வனத்துறை ரூல்ஸ் சமமே! வன்னியரசு சம்பவத்தை விசாரிக்க உத்தரவிட்ட கர்நாடகா
பெங்களூர்: தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு முதுமலை புலிகள் சரணாலயத்திற்குள் சென்று புலியை விரட்டுவது போல் வீடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவரை பல்வேறு தரப்பினர் கண்டித்து வரும் நிலையில் கர்நாடகா வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி திடீரென்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கர்நாடகா வனத்துறை அமைச்சர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பவர் வன்னியரசு. இவர் கடந்த 10ம் தேதி நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு சென்றார். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை அமைச்சர் வன்னியரசு சுற்றிப்பார்த்தார்.
ட்ரெக்கிங் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டார். அதில் வன்னியரசு வனத்துறை ஊழியர்களுடன் வனப்பகுதிக்குள் சுற்றிப்பார்க்கிறார். புலியை நோக்கி விரட்டுவது போல் ஓடியது, யானைகளை அருகே நின்று பார்த்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
முதுமலை புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சருக்கு மட்டும் அனுமதி எப்படி என சர்ச்சை வெடித்தது. அவருக்கு மட்டும் யார் அனுமதி கொடுத்தார்கள்? என்று கேள்வி எழுப்பி பலரும் அவரது செயலை கண்டித்தனர்.
இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அமைச்சர் வன்னியரசு விவகாரம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராமலிங்க ரெட்டி அளித்த பதிலில், ''எனக்கு இன்று காலையில் வீடியோ வந்தது. நமது சமூக வலைதளத்தை கவனிக்கும் சுதர்சன் என்பவர் அனுப்பி வைத்தார். அதில் வாகனத்தின் பதிவெண் எல்லாம் உள்ளது. அதனை ஆய்வு செய்யும்படி கூறியிருக்கிறேன்.
வனத்துறை மற்றும் போலீசாருக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். ஏதேனும் விதிமீறல் நடந்துள்ளதா? என விசாரிக்கிறோம். ஒவ்வொருவரும் எந்த பொறுப்பில் இருந்தாலும் வனத்துறையின் விதிகளை பின்பற்ற வேண்டும் ஏதேனும் விதிமீறல் இருந்த வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
வன்னியரசு சென்ற முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி தான் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகம் சரணாலயம் உள்ளது. இதனால் வன்னியரசு கர்நாடகா வனப்பகுதிக்குள் நுழைந்து வீடியோ எடுத்தாரா? என்ற சந்தேகம் உள்ளது. இதனால் தான் கர்நாடகா வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையில் வன்னியரசு மீது தவறு இருப்பின் சட்டப்படி கர்நாடகா வனத்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும். அதேநேரம், தமிழக அரசு இதுவரை இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
