பரந்தூர் ஏர்போர்ட்! "நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால் தற்கொலை.." கிராம மக்கள் அறிவிப்பு
சென்னை: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பொதுமக்கள் இரவோடு இரவாகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுத்தால் ஒன்றாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை இப்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகச் சென்னை விமான நிலையம் இருக்கிறது.

சென்னை ஏர்போர்ட்: விமான நிலையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், நகருக்குள்ளேயே அமைந்துள்ளதால் இடம் கிடைப்பதில் சிக்கல் தொடங்கிப் பல காரணங்களால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
2வது விமான நிலையத்திற்கு பல்வேறு இடங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், பரந்தூர் இறுதி செய்யப்பட்டது. இருப்பினும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்கொலை: இந்த விமான நிலையத்திற்கு ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கிடையே 2வது அறிவிப்பை அரசு நிறைவேற்றினால் பொதுமக்கள் பலரும் தற்கொலை செய்து கொள்வோம் கிரம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும், அறிவிப்பு வந்த நாளிலேயே இரவு போராட்டத்திலும் குதித்தனர்.
மேலும், தன்னை ஒரு விவசாயி என்றும் விவசாயிகளின் நண்பர் என்றும் என்றும் அழைத்துக் கொள்ளும் அதிமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தங்கள் கிராமத்திற்கு ஒருமுறை கூட வராமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
கிராம மக்கள்: கிரீன்ஃபீல்டு ஏர்போர்ட் அமைக்கக் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். விமான நிலையம் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக இந்த அறிவிப்பு வந்துள்ளது என்கிறார்கள் பொதுமக்கள். இந்த அறிவிப்பு குறித்துக் கேள்விப்பட்டதும் விமான நிலையத்தை இடமாற்றம் செய்யப் போராட்டம் நடத்தி வந்த மக்கள் கொந்தளித்தனர்.
கிராம நிர்வாகமே பொறுப்பு: அங்கே நேற்று இரவோடு இரவாகத் திரண்ட மக்கள் 500க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மீண்டும் நிலம் கையகப்படுத்துவது குறித்து அரசு மீண்டும் எதாவது அறிவிப்பை வெளியிட்டால் ஏகனாபுரத்தில் பொதுமக்கள் இணைந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். அப்படி எதாவது நடந்தால் கிராம மக்களின் உயிரிழப்புக்குக் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்..
தொடரும் போராட்டம்: கிராம மக்கள் போராட்டம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களைக் கைது செய்ய முயன்றனர். இருப்பினும், அங்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் அவர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டம் தொடரும் என்று அறிவித்து கிராம மக்கள், அப்போது தான் தங்கள் நிலத்தை விட்டுத் தர மாட்டோம் எனக் கூறி, அடுத்த கட்ட போராட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். 766வது நாளாக இன்றும் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications