பரனூர் சுங்கச்சாவடி 2019ம் ஆண்டே காலாவதி.. செங்கல்பட்டில் லாரி உரிமையாளர்கள் செய்த தரமான சம்பவம்
சென்னை : சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியின் ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக பரனூர் டோல்கேட்டில் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது. பொதுவாக ஊருக்குள் சுங்கச்சாவடிகள் வைக்கக்கூடாது என்பது நடைமுறையில் உள்ள விஷயம். ஆனால் பரனூர் சுங்கச்சாவடி சென்னை நகருக்குள்ளேயே வந்துவிட்டது. ஆனால் இன்னமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பரனூர் சுங்கச்சாவடி ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. 15 ஆண்டுகள் வரை மட்டுமே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க முடியும்.

அதன்படி 2019ம் ஆண்டே பரனூர் சுங்கச்சாவடி மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள், சென்னை, செங்கல்பட்டு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகள் பெரிய அளவில் குரல் கொடுக்காத நிலையில், இது மத்திய அரசின் கவனத்திற்கு போகவில்லை.. தேசிய நெடுஞசாலை துறை ஆணையம் பரனூர் சுங்கச்சவாடியை அகற்ற முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக உள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை..
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி 2019ம் ஆண்டே காலாவதியாகிவிட்டது. எனவே பரனூர் சுங்கச்சாவடி மீது 420 பிரிவின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காலவதியான பின்னரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுங்கச்சாவடியில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள்..
இந்த பரனூர் சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை விதிகளின் படி, கழிவறை, மின்விளக்கு உள்பட அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு பெரிய அளவில் கையாடல் நடந்திருப்பதாகவும் புகாரில் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். முன்னதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் லாரி உரிமையாளர்கள் உள்பட பலர் பரனூர் சுங்கச்சாவடிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டமும் நடத்தி, அதனை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை மூடுவது குறித்து இதுவரை எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை.. போலீசில் அளிக்கப்பட்ட புகார் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் ஏராளமான சுங்கச்சவாடிகள் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அண்மையில் மதுரை நத்தம் சாலை சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கடந்த ஆண்டு பரனூர் சுங்கச்சாவடி குறித்து குறிப்பிடுகையில், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். தமிழ்நாட்டில் 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு பொதுமக்களிடம் கொள்ளையடித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் அம்பலப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications