‛‛தொகுதி குறைக்க கூடாது’’ சோனியாவிடம் அழுத்திய தலைகள்! பரபர கார்த்தி சிதம்பரம்.. திரும்பும் திமுக
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கடந்த முறையை போலவே இந்த முறையும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாமல் போட்டியிட வேண்டும் என சோனியா காந்தியிடம் காங்கிரஸ் தலைவர்கள் அழுத்தமாக கூறியுள்ளதாக கார்த்தி ப சிதம்பரம் தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்கள் நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு வந்துள்ள சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சந்தித்தனர்.
மேலும் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், மூத்த நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்தும் கட்சியின் வளர்ச்சி பணிகள், அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுபற்றி அவர்கள் விவாதித்தனர்.
மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு செய்வதும், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சிவகங்கையின் எம்பியான கார்த்தி ப சிதம்பரம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்கள் கட்சியின் நிலவரம், எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும். தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும். மாநிலத்தில் எப்படி கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது பற்றி வெளிப்படையாக கட்சியின் முன்னோடி நிர்வாகிகள் முன்னாள் தேசிய தலைவர் சோனியா, பிரியங்கா காந்தியிடம் எடுத்து கூறினர். ஒழிவு மறைவு இன்றி கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது.
அதோடு கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறையாமல் இந்த முறையும் போட்டியிட வேண்டும். அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்களின் விருப்பமோ, கட்டாயமோ கிடையாது. ஆனால் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய கூடாது என தெரிவிக்கப்பட்டது'' என்றார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி கடந்த 2019 தேர்தலை போலவே தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளை கேட்டு பெற காய் நகர்த்தி வருவது உறுதியாகி உள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த திட்டத்துக்கு பலன் கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் கடந்த முறை திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக உள்ளது. மேலும் தேசிய அளவில் ‛இந்தியா' என்ற பெயரில் 26 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றால் தான் ‛இந்தியா' கூட்டணியில் நல்ல மரியாதை இருக்கும் என திமுக நினைக்கும். மேலும் ஆளும் கட்சி என்பதால் கூடுதல் இடங்களில் களமிறங்கும் திமுகவினர் நினைப்பதாக விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையை போலவே தொகுதிகள் கிடைக்குமா? அல்லது குறையுமா? என்பதை அறிய நாம் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
****












Click it and Unblock the Notifications