பாஜகவுக்கு பெரிய ‘ஷாக்’ கொடுத்த பவன் கல்யாண்.. அப்படி பேசிட்டு.. இப்போ திமுகவுடன் கைகோர்த்துட்டாரே!
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில் பவன் கல்யாண் கட்சியும் பங்கேற்கிறது. ஜனசேனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி உதய் சீனிவாஸ் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்பது அரசியல் வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு
2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என கூறப்படுகிறது இது தொடர்பாக முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர் கட்சி, தமாகா தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டு இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஒருமித்த எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார். மேலும், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மற்ற மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை வந்துள்ள தலைவர்கள்
இந்த அழைப்பை ஏற்று நேற்று காலையிலேயே கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். அதே போல பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான சஞ்சய்குமார் தாஸ் பர்மா வருவகை தந்துள்ளனர். மற்ற கட்சி தலைவர்க்ளும் சென்னை வருகை தந்து வருகின்றனர்.
பவன் கல்யாண் கட்சி அதிரடி முடிவு
இதில் முக்கியமான ட்விஸ்ட்டாக, மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, தொகுதி மறுவரையறை தொடர்பான திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், ஜனசேனா கட்சி சார்பாக அக்கட்சி எம்பி உதய் சீனிவாஸ் இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்னை வரவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்து வரும் திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்.பி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. கூட்டணி விவகாரம் தாண்டி, இது மாநில நலனுக்கானது என்பதால் பவன் கல்யாண் இதில் திமுக உடன் கைகோர்த்து இருக்கலாம் என்று தெரிகிறது.
பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
அண்மையில் இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்?" என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பவன் கல்யாண், "ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும், ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும்.. இவை இரண்டுமே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல. நான் இந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், அதை கட்டாயமாக்குவதற்காக முன்பு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன்.
தேசியக் கல்விக் கொள்கை 2020 இந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை என்ற நிலையில், அதைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே. இந்தக் கொள்கையை தவறாக விளக்கி, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது, அல்லது பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் எனத் தவறாக கூறுவது மொழிக் கொள்கையைப் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது." எனத் தெரிவித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் பேசிய பவன் கல்யாண், "சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி.. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது." எனப் பேசி இருந்தார்.
கடந்த 2023 செப்டம்பர் 2 ஆம் தேதி 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கோரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்க வேண்டும்." எனப் பேசி இருந்தார். சனாதனம் குறித்த இந்த கருத்து தொடர்பாகவே உதயநிதியை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடியிருந்தார் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்.












Click it and Unblock the Notifications