விஜய் முதல்வர் ஆனதில் இருந்து எனக்கு அழுத்தம் கொடுக்குறாங்க.. வேதனையை கொட்டிய பவன் கல்யாண்
சென்னை: தமிழகத்தில் முதல்வராக விஜய் பதவியேற்றத்தில் இருந்து ரசிகர்களிடம் இருந்து தனக்கு அழுத்தம் வருவதாகவும், விஜய்யுடன் தன்னை ஒப்பிட்டு விமர்சிக்க வேண்டாம் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வேதனையை கொட்டியுள்ளார். தமிழக சூழலும் ஆந்திராவின் சூழலும் வேறு என்று பவன் கல்யாண பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பொறுப்பெற்றார். கட்சி தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் ஆட்சி அதிகாரத்தை விஜய் பிடித்தது இந்திய அளவில் கவனம் பெற்றது.

பவன் கல்யாணுக்கு புதிய தலைவலி
என்.டி.ராமா ராவ், எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜய் ஆட்சியை பிடித்து இருப்பதாக பலரும் பாராட்டி வருகிறார்கள். தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்த விஜய்யால், பக்கத்து மாநிலமான ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது, பவன் கல்யாணுக்கு அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.
இது குறித்து தனது கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பவன் கல்யாண், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து விஜய் முதல்வர் ஆனதில் இருந்து மக்கள் எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். நமது பக்கத்து மாநிலத்தில் ஒரு நடிகர் கட்சியை தொடங்கி முதல்வராகிவிட்டார். அதே மாதிரி ஆந்திராவில் நான் செய்ய வேண்டும் என்று பலரும் எனக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
அமைச்சர்கள் கூட என்னுடன் நிற்கவில்லை
"பக்கத்து வீட்டுக் கல்யாணத்துக்கு தேவையில்லாத உற்சாகம் காட்டிக்கொண்டு, நம்ம குடும்ப திருமணம் இல்லையென்பதே தெரியாமல் சிறிய குழந்தைகள் ஓடி அலைவதுபோல இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் நிலைமை வேறுபட்டது. அவர்கள் சொல்வது போல, நான் 2019 தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்? அமைச்சர்கள் கூட என்னுடன் நிற்கவில்லை. அதனால் ஒப்பிட வேண்டாம்" என்றார்.
பவன் கல்யாணுக்கு நடந்தது என்ன?
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி 'பிரஜா ராஜ்யம்' என்ற அரசியல் கட்சி தொடங்கி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் சீரஞ்சீவியின் கட்சி 18 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து, அரசியலில் நீடிக்க முடியாத சீரஞ்சிவி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து மீண்டும் சினிமாவுக்கே திரும்பினார்.
அதேபோல, அவரது தம்பியான பவன் கல்யாணும் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். 2019-ல் ஜனசேனா கட்சி 137 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் , வெறும் ஒரே ஒரு இடத்தில் (ராஜோல்) மட்டுமே வெற்றி பெற்றது. பவன் கல்யாண் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியையே சந்தித்தார். ஒட்டுமொத்தமாக 5.5% வாக்குகளை மட்டுமே பெற்றதால், பவன் கல்யாண் அங்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதி இல்லை என்றும் மற்ற வாக்குகளை பிரிக்கும் பி டீம் என்றே விமர்சிக்கப்பட்டார்.
முதல் தேர்தலில் தனித்து போட்டியிட்டதால் ஏற்பட்ட தோல்வியில் பாடம் கற்ற பவன் கல்யாண், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக - தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 70,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், அவரது ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று 100% வெற்றி விகிதத்தை பதிவு செய்தது. இன்று அவர் ஆந்திராவின் துணை முதல்வராக, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையை நிர்வகித்து வருகிறார்.














Click it and Unblock the Notifications