தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. போலீசின் இத்தனை கொடூர வன்மத்துக்கு எது காரணம்? பழ.நெடுமாறன் கேள்வி
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடத்திய போலீசாரின் இத்தனை வன்மத்துக்கு காரணம் என்ன? பின்னணி என்ன என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது தூத்துக்குடியில் போலீசார் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒட்டுமொத்த நாட்டையே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்தது.

அருணா ஜெகதீசன் அறிக்கை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தமது விசாரணையை நிறைவு செய்து தமிழக அரசிடன் அறிக்கையை தாக்கல் செய்தது.

சட்டசபையில் அருணா ஜெகதீசன் அறிக்கை
நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை தமிழக சட்டசபையில் முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கை மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் இப்படுகொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்; அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். இத்துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விவரித்தார்.

கொடுமையான நிகழ்ச்சி- நெடுமாறன்
இதனிடையே நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை கண்டறியாத மிகக் கொடுமையான நிகழ்ச்சியாகும். 13பேர் சுட்டுக்கொல்லப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்படப் பலர் பொறுப்பற்ற வகையிலும், மனிதநேயம் அற்றும் இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர் என நீதிபதி அருணா செகதீசன் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

பின்னணிதான் என்ன?
அதேவேளையில் தங்களுக்கு மேலே இருக்கும் உயர் அதிகாரிகளை இவர்கள் சிறிதளவுகூட கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளனர் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் பலர் குறிபார்த்துச் சுடப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இத்தகைய வன்மம் அதிகாரிகளுக்கு ஏற்படுவதற்கு நிச்சயமாக ஏதோ பின்னணி இருக்கவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பதும் முழுமையாக ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வரை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications