ஒன்றே குலம் ஒருவனே தேவன் .. அண்ணா சொன்னாரே.. அதுதான் ஆன்மீக அரசியல்: கரு. பழனியப்பன் பொளேர்!
சென்னை: தமிழகத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணா பிரகடனம் செய்ததுதான் முதல் ஆன்மீக அரசியல் என்று இயக்குநர் கரு. பழனியப்பன் அதிரடியாக கூறியுள்ளார்.
தமிழ் கேள்வி யூ டியூப் சேனலின் செய்தி ஆசிரியர் செந்தில்வேலுக்கு இயக்குநர் கரு. பழனியப்பன் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
திராவிடமும் தமிழ்த் தேசியமும் வெவ்வேறானது அல்ல. தமிழ்த் தேசியத்தின் இன்னொரு விரிந்த பார்வை திராவிடம். சண்டை என்பது ஆரியத்துடன்தான்.
மு.க.ஸ்டாலினை எதிர்த்தும் சீமான் நிற்கலாம்.. எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தும் சீமான் நிற்கலாம். இரண்டுமே திராவிடக் கட்சிகள்தானே..

ரஜினிகாந்த்- கமல்ஹாசன்
திரைத்துறையில் இருவரும் இணைந்து நடித்தால் மார்க்கெட் பெரிதாகாது; தனித்து நடிப்போம் என ரஜினிகாந்துக்கு யோசனை சொன்னவரே கமல்ஹாசன். அதாவது அன்றைய நிலையில் ரஜினிகாந்த் கைவிடப்பட்ட மனநிலையில்தான் இருந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்னரே அப்படி சிந்தித்த கமல்ஹாசன் இன்று ரஜினியை அவசரமாக சேர்த்து கொள்ள முயற்சிப்பது ஏன்? என்பது தெரியவில்லை. 40 ஆண்டுகளாக நீ என்னை பார்க்கவரவில்லை.. இப்போது ரோட்டுக்கு வந்துவிட்டாய்.. வா..வா... என்பதுதான் மக்கள் மனநிலை. அதனால்தான் நடிகர்களை பார்க்க மக்கள் கூடுகிறார்கள். அதேநேரத்தில் அந்த மக்களுக்காக தினசரி போராடுகிற அரசியல் தலைவன் யார் என்பதும் அந்த மக்களுக்கு தெரியும். யார் தினசரி நம்மை பார்க்க வந்தது? யார் இப்ப ஓட்டு கேட்க வருவது? என்பது வாக்காளனுக்கு நன்றாகவே தெரியும்.

யார் இந்து?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆடு கோழி வெட்டக் கூடாது என்று உத்தரவிட்டார். அது யாருக்கு எதிரானது? யாருக்கு ஆதரவு? இந்துக்களுக்கு ஆதரவானதா அது? அந்த வாரத்தில்தான் இதுவரை இல்லாத வகையில் ஆடு, கோழிகள் வெட்டப்பட்டன. ஏனெனில் காலம் காலமாக அப்படித்தான் எல்லோரும் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என் சாமியை நானே போய் தொட்டு தடவி குளிப்பாட்டி இடுப்பில் வேட்டி சுத்தி ஒரு கிடா அறுத்து சாப்பிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். சுடலைமாடனை கும்பிடுகிறவனை இந்து என வைத்துக் கொண்டால் அவன் திமுகவுக்குதானே ஓட்டுப் போடுவான். இந்து என்று யாரை சொல்கிறீர்கள்? அய்யரை ஏஜெண்டாக வைத்து கும்பிடுகிறவர்கள்தான் இந்துவா? நான் இந்து அல்ல. எனக்கு இந்து என பெயர் வைத்திருக்கிறீர்கள்.

அண்ணா- ஆன்மீக அரசியல்
திமுக என்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என சொன்னதோ அன்றே இந்த அரசியல் வந்துவிட்டது. வாக்கு அரசியலுக்கு வந்துவிட்டதால் சமரசம் தேவை என்பதற்காக அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். அதுதான் முதலாவது ஆன்மீக அரசியல். அனைத்து ஊர்களில் இருக்கிற சிறுதெய்வ வழிபாடுகளில் திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் இந்துக்கள்தான். ஆரியப் போர் என்பது பிராமணர்களை எதிர்த்து அல்ல. பிராமணீயத்தை எதிர்த்துதான் போர். எனக்கு மேலாக ஒருவனையும் எனக்கு கீழாக ஒருவனையும் வைக்கிறது பிராமணீயம்.

பிராமணீயம் எது?
எனக்கு கீழே ஒருவன் இருப்பான் என நான் நினைத்தால் அதுவே பிராமணீயம். பிராமணீயக் கருத்துக்கு ஒரு பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால் இங்கே உள்ள அரசியல் அனைவரையும் சமமாக நடத்துங்கள் என்கிறது. அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்துக்கள் வாங்க என்பார்கள். அங்கே போனதுக்கு பின்னர் அவர்களது முகத்தைக் காட்டுவார்கள். திமுகவை இந்துவிரோத கட்சி என்பான்; ஊழல் கட்சி என்பான்; எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அலைகிறான் அவன். ஆனால் நாம் செய்ய வேண்டிய வேலை என்பது அவனை உள்ளேவிடாமல் பார்த்து கொள்வதுதான்.

வட இந்தியா- தென்னிந்தியா
வட இந்திய அரசியலில் ஊருக்கு ஒரு பண்ணையாரும் மிராசுதாரும் அவர்களுக்கு இருக்கிறார்கள். அங்கே சித்தாந்தம் அவர்களுக்கு தேவை இல்லை. ஒரு பண்ணையார் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு போனால் அவருக்கு கீழே உள்ள அத்தனை பேரும் பாஜகவுக்குதான் ஓட்டுப் போடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஊருக்கு ஒரு தலைவர் இருந்தாலும் அவர்தான் கட்சி மாறுவார். மக்கள் நீங்க போய்ட்டு வாங்க என்று அப்படியே இருந்து கொள்வார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

பெரியார் சித்தாந்தம்
ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் சித்தாந்தத்துடன் அரசியல் பழகியவர்கள். 90 வயதை தாண்டியும் ஒரு கிழவன் இந்த நாட்டில் உனக்கு அறிவு இருக்குடா.. சிந்தி சிந்தி என சொல்லியிருக்கிறார் (பெரியார்)... இந்த தமிழ் மண்ணில் இருக்கிற எல்லோரது மனதிலும் ஒரு கனமாவது பெரியார் தொட்டிருப்பார். ஒருவன் கடவுளை கும்பிடலாம். கும்பிடாமல் போகலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவரது ஏதாவது ஒரு பேச்சு, தொலைநோக்கு திட்டம் இந்த மண்ணின் மக்களுக்கு பிடித்துதான் இருக்கும். பெண்ணுரிமையை பற்றி பெரியாரைவிட அதிகம் பேசியது யார்? இவ்வாறு கரு. பழனியப்பன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications