புதுச்சேரி சிறையில் சீமானுக்கு விஜயலட்சுமியை தவிர அனைத்து வசதி செய்தது திராவிடம்தான்: லோகு அய்யப்பன்
சென்னை: 2009-ம் ஆண்டு புதுச்சேரி சிறையில் 77 நாட்கள் சீமான் அடைக்கப்பட்டிருந்த போது நடிகை விஜயலட்சுமியைத் தவிர அனைத்து வசதிகளையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு செய்து கொடுத்தது அவரால் திராவிட திருட்டு கும்பல் என இன்று விமர்சிக்கப்படுகிற நாங்கள்தான் என்று புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் லோகு அய்யப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதுவை லோகு அய்யப்பன் பேசியதாவது: ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், வைகோ, சுப்புலட்சுமி ஜெகதீசன், விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆற்றிய பணிகள் ஏராளம்; நேரடியாக வழக்குகளை எதிர்கொண்டவர்கள். அவர்களுக்கு இணையாக சீமானை வைத்து பேச வேண்டியது இல்லை. ஈழப் போராட்டத்துக்கு நான் செய்த அளவுக்காவது சீமான் செய்திருப்பாரா?

2008-ம் ஆண்டுதான் சீமான் ஈழத்துக்கு சென்றார்; நான் 2005-ம் ஆண்டே ஈழத்துக்கு சென்று திரும்பினேன். விசிகவின் வன்னி அரசுதான் சுமாரான இயக்குநராக இருந்த சீமானை பரிந்துரை செய்தார். இதனையடுத்து விடுதலைப் புலிகள் கொளத்தூர் மணியிடம் உறுதி செய்துவிட்டுதான் சீமானை வரவழைத்தனர்.
காட்டுக் கூச்சல் போடும் சீமான்
2009-ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத்துக்கு சென்று வந்ததைப் பற்றி அருவறுக்கத்தக்க வகையில் காட்டு கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார் சீமான். விடுதலைப் புலிகள் 3 ஆண்டுகள் தம்மை வேவு பார்த்து அழைத்ததாக சொல்கிறார் சீமான். அவரை 3 நாட்கள் வேவு பார்த்திருந்தாலே விடுதலைப் புலிகள், சீமானை அழைத்திருக்கவே மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
சீமானின் ஈழத்து கதைகள்
சீமான் சினிமாவுக்கு கதை எழுதக் கூடியவர்; அவர் எடுத்த படங்கள் ஓடவில்லை. அந்த கதை அனுபவத்தை வைத்து ஈழத்து கதைகளை பேசுகிறார். அதை தற்குறிகளாக இருக்கும் புதிய இளைஞர்கள் நம்புகின்றனர்; அவர்களுக்கு ஈழம் பற்றியோ விடுதலைப் புலிகள் பற்றியோ எந்த புரிதலும் இல்லை.
பொட்டம்மானாக இருந்தாலும்...
2008-ம் ஆண்டு முன்னர் சீமான், தமிழ்நாட்டில் செய்த செயல்தான் என்ன? விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டம்மான். இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பே பொட்டம்மானிடம் தோற்றுப் போனது. அப்படிப்பட்ட பொட்டம்மான், பிரபாகரனை சந்திக்க வேண்டும் என்றாலும் தமது துப்பாக்கியை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்பது விடுதலைப் புலிகள் இயக்க நடைமுறை. ஆனால் சீமானோ, தமக்கு பிரபாகரன் துப்பாக்கி பயிற்சி கொடுத்ததாக கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்.
புலிகள் உணவுப் பிரியர்கள் அல்ல
ஈழத்தில் கிளிநொச்சி இரணைமடு ஏரிக்கு எதிரே ஒரு சர்வதேச தரத்திலான ஹோட்டல் அமைக்கப்பட்டிருந்தது. அங்குதான் வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட அனைவரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு பெரும்பாலும் கடல் உணவுதான் இருக்கும். விடுதலைப் புலிகள் உணவுப் பிரியர்களே இல்லை; உணவைப் பற்ரி சிந்திப்பவர்களும் இல்லை; நானும் அங்குதான் தங்கினேன்; சாப்பிட்டேன்.
அத்தனையும் கதைவிடும் சீமான்
ஈழத்துக்குப் போகிறவர்களிடம் பிரபாகரன் குறித்து தளபதிகள் பல்வேறு தகவல்களை சொல்வார்கள்; சீமான் சினிமா கதாசிரியர் என்பதால் தன்னை அந்த இடத்தில் வைத்துக் கொண்டு பல்வேறு கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். நார்வே தூதுக்குழு வருகை தந்த போது அவர்களுக்கான ஒவ்வொரு சின்ன சின்ன தேவையையும் பிரபாகரன் கவனமாக பார்த்துக் கொண்டார். அப்படியான ஒன்றுதான் தாம் சாப்பிடும் போது விடுதலைப் புலிகள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள் என்கிற கதை.
சீமானின் ஈழப் பயணம்
2008-ம் ஆண்டு ஈழத்துக்குப் போன பின்னர் பிரபாகரனை சந்தித்த பின்னரே தமிழன் என்றால் யார்? தமிழ்த் தேசியம் என்றால் என்ன? என தெரிந்து கொண்டேன் என்கிறார் சீமான். அதன் பின்னர் திராவிடம் என்பதே திருட்டு கும்பல் என தெரிந்தது என்கிறார். ஆனால் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீமான் கைது செய்யப்பட்டு 77 நாட்கள் புதுச்சேரி சிறையில்தான் இருந்தார்.
புதுச்சேரி சிறையில் சொகுசு வாழ்க்கை
புதுச்சேரி சிறையில் சீமான் அடைக்கப்பட்டிருந்த போது, நடிகை விஜயலட்சுமியைத் தவிர அத்தனை வசதிகளும் நாள்தோறும் சீமானுக்கு செய்து தந்தது நான்தான். ஒவ்வொரு நேரமும் வகை வகையான உணவுகளை சீமானுக்கு அனுப்பியது நாங்கள்தான். பிரபாகரனை சந்தித்த பின்னர்தான் திராவிடம் திருட்டுக் கும்பல் என தெரிந்தது என்றால் புதுச்சேரி சிறையில் இருந்த போது அந்த திராவிட திருட்டுக் கும்பலாகிய எங்களிடம்தான் வாங்கி தின்றார் சீமான். அந்த 77 நாட்களும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்காத உணவு வகைகளை சிறைக்குள் அனுப்பியது நாங்கள்தானே.. இந்த திராவிட கும்பல்தான் உனக்கு தமிழ்நாடு முழுவதும் மேடை அமைத்து கொடுத்தது.. பெரியார் பேரன் என நீ பேசியதை நாங்கள் நம்பி மேடை போட்டுக் கொடுத்தோம்.. இல்லை என்றால் சீமானை யாருக்குதான் தெரியும்? இவ்வாறு புதுவை லோகு அய்யப்பன் பேசினார்.












Click it and Unblock the Notifications