பெருங்களத்தூர் பிஸி.. கிளாம்பாக்கம் அதுக்கு மேல.. அதை விடுங்க, அடங்காத ஆம்னி.. இதுதான் டிக்கெட் விலை
சென்னை: தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகிறார்கள். அந்தவகையில், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகரிக்க துவங்கி உள்ளது.
தமிழகத்தில், பொங்கல், புத்தாண்டு, ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில், ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் அதிகமாகிவிடுவது இயல்பாகிவிட்டது. இதுகுறித்து தமிழக அரசும், விதிமுறைகளை மீறக்கூடாது என்று எச்சரித்தபடியே இருந்தாலும், ஆம்னிகளின் கட்டண உயர்வு அதிகரித்துவிடுகிறது.

ஆம்னிகள்: இத்தனைக்கும் பயணிகளின் வசதிக்காகவே, தமிழக அரசு போக்குவரத்து கழகமும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனாலும், இந்த பஸ்களிலும், புக்கிங் முடிந்து விடுவதால், பலரும் ஆம்னி பஸ்களை நாடி செல்ல நேரிடுகிறது..
எனவே, ஆம்னி பஸ்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல மடங்கு கட்டணத்தை ஏற்றிவிடுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனினும், தமிழக அரசால் கட்டண கொள்ளையை தடுக்க முடியவில்லை.
2 மாதங்களுக்கு முன்புகூட, தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையினர், பரவலாக ஆம்னி பஸ்களில் அதிரடி சோதனை நடத்தி, கூடுதல் கட்டணங்களை வசூலித்த ஆம்னிகளை பறிமுதல் செய்திருந்தனர். அப்போது ஆம்னிகளின் கட்டண கொள்ளை குறையவில்லை என்றே தெரிகிறது.
3 நாள் லீவு: இதோ, இப்போது புனித வெள்ளியையொட்டி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், மொத்தமாக 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. எனவே, சென்னைவாசிகள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணமாகி வருகிறார்கள். இந்த விடுமுறையை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பஸ்கள், கூடுதலாக கட்டணத்தை உயர்த்திவிட்டுள்ளதாம்.
அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னியில் செல்ல, ரூ.5 ஆயிரம் கேட்கிறார்களாம்.. கோவைக்கு செல்வதற்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம் கேட்கிறார்கள்.. மற்ற நாட்களில் வெறும் 700, 800 வரை ரூபாய்க்கு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இபபோது, 5000 எகிறிவிடவும், நொந்துபோயிருக்கிறார்கள் பயணிகள்.
5 மடங்கு: சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம் ஆகிறதாம்.. இப்படி ஒரேடியாக 5 மடங்கு ஏற்றிவிட்டால், எப்படி வெளியூர் செல்வது என்று கவலையுடன் கேட்கிறார்கள் பயணிகள். தட்கல் முறையிலும் புக்கிங் செய்ய முடியாமல், ரிசர்வேஷனும் முடிந்துவிட்ட நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் நிரம்பி வழிவதால்தான், வேறு வழியின்றி பொதுமக்கள் ஆம்னி பக்கம் வரநேரிடுகிறது.
இதை சாக்காக வைத்து, இப்படி கொள்ளை லாபம் அடிப்பது சரியா? பிளைட் டிக்கெட் ரேஞ்சுக்கு, பஸ் டிக்கெட் வாங்க வேண்டியிருக்கிறதே? இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கோரிக்கை: தற்சமயம், தொடர் விடுமுறையையொட்டி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று சென்னையிலிலுருந்து இயக்கப்படுகிறது... இந்த வார இறுதியில், மேலும் 650 பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் என்றும் கூறப்படுகிறது.
இப்போதே கிளாம்பாக்கத்திற்கு வரும் ஒவ்வொரு பஸ்சிலும் ரிசர்வேஷன் செய்த பயணிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறதாம்.. ரிசர்வேஷன் செய்தவர்களுக்கே பஸ்ஸில் சீட்கள் கிடைப்பதில்லையாம்.
2வது கோரிக்கை: அதனால், வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்யாத பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்றும் மற்றொரு கோரிக்கையை பயணிகள் விடுத்துள்ளனர். 3 நாள் விடுமுறை நாளை துவங்க உள்ள நிலையில், இன்று மாலை முதலே சென்னையின் புறநகர் பகுதிகளில் நெரிசல் கூடிவருகிறது..!!!












Click it and Unblock the Notifications