அதிமுகவுக்கு புது சிக்கல்! தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ஊழல்? விசாரிங்க! உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு ஊழல் கண்காணிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எஸ்.செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் கண்காணிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

பல நூறு கோடி ரூபாய் இழப்பு..
செல்வக்குமார் தாக்கல் செய்த மனுவில், "தமிழக தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மூலம் 4 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல், இரண்டாவது சிமெண்ட் ஆலையில் 5 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்று வரும் இந்த நிறுவனத்தில், கடந்த 2018 முதல் 2021-ம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பயங்கர முறைகேடுகள்..
நிறுவனத்தின் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிட்ட போது, நிபந்தனைகளை மீறி பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் பதவி உயர்வு உள்ளிட்டவைகளிலும் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளன. கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான இ- டெண்டரிலும் முறைகேடு நடைபெற்று இருக்கிறது. இதனால் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் பண இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

டெண்டரை மீறி..
டென்டரில் குறிப்பிடப்பட்ட தொகையை மீறி அதிக தொகைக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. மற்ற சிமெண்ட் நிறுவனங்களிடம் இருந்து சிமெண்ட்களை வாங்கி, சலுகை விலையில் சிமெண்ட் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட மென்பொருளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தமும் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பறந்த உத்தரவு..
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவானது, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு குறித்து ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications