கோவில் மீது பெட்ரோல் குண்டு! எச்சரித்தும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு தோல்வி.. எடப்பாடி ஆவேசம்
சென்னை: சென்னை வீரபத்திரன்சுவாமி கோவிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த விடியா திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி அடைந்திருப்பதன் எடுத்துக்காட்டே இந்த சம்பவம் என்று விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருக்கா வினோத் என்பவர் வீசிய பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என போலீஸ் தரப்பும், 2 குண்டுகள் வெடித்ததால் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் பகுதி சேதமடைந்ததாகவும் குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு இதற்கு விளக்கம் அளித்தது காவல்துறை. இந்த சம்பவம் தற்போது அடங்கியுள்ள நிலையில், தற்போது சென்னை பாரிமுனை அருகே உள்ள கோயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் அமைந்துள்ள வீரபத்திர சுவாமி கோவிலில் அதே பகுதியை சேர்ந்த 38 வயதான முரளி கிருஷ்ணன் என்பவர் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில் கூறியிருப்பதாவது:- சென்னை பாரிமுனை, ஶ்ரீ வீரபத்ரசாமி திருக்கோவில் உட்பிரகாரத்துக்கு உள்ளேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த விடியா திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி அடைந்திருப்பதன் எடுத்துக்காட்டே இந்த சம்பவம்.
முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில், ஆளுநர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடனும் இந்த ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர். எதிலும் அக்கறையின்றி செயல்படும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர் வெறும் வாய்ச்சவடால் இன்றி இனியேனும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications