வேகமாக பைக் ஓட்டுபவர்கள் மீது ஆக்சன்.. "என்ன செய்ய போறீங்க?".. தமிழக அரசுக்கு பறந்த "நோட்டீஸ்"
சென்னை: மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை வகுக்க கோரியும், உரிய அனுமதியின்றி மோட்டார் சைக்கிள்களில் மாற்றங்களை செய்து (Alter) பயன்படுத்துவதை தடுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மைக்காலமாக, தமிழகம் முழுவதுமே இளைஞர்கள் பலர் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்களை இயக்குவதை பார்க்க முடிகிறது. ஏதோ பந்தயத்தில் ஓட்டுவதை போல அவர்கள் சாலையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்கின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு இவ்வாறு மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவதுதான் காரணம் என போக்குவரத்து போலீஸார் கூறுகின்றனர்.
இதேபோல, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றுவதற்காகவும் சாலையில் செல்லும் போது மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்வதும் அதிகரித்து வருகின்றன. இதுவும் விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற மங்களூர் தீவிரவாதி.. நாசவேலைக்கு சதியா? என்ஐஏ 'திடுக்' தகவல்

அதிவேகமாக இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின்படி, அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இயக்குவது தொடர்பாக பதியப்படும் வழக்குகள் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது தெரியவந்திருக்கிறது.

ஒழுங்காக வருபவர்களுக்கும் ஆபத்து
அதேபோல, வாகனங்களின் வடிவத்தையும், சைலன்சர்களை மாற்றியும் மோட்டார் சைக்கிள்களை இயக்குவதும் அதிகரித்திருக்கிறது. இதுபோல வாகனங்களை வேகமாக இயக்குவதால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், பாதசாரிகளுக்கும், ஒழுங்காக வரும் பிற வாகன ஓட்டுனர்களுக்கும் அச்சுறுத்தலையும், ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும், முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதியை பெறாமல் வாகனங்களில் மாற்றங்கள் செய்து இயக்குவதும் விபத்துக்களுக்கு வழி வகுக்கிறது.

நடவடிக்கை வேண்டும்
இவ்வாறு, இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பதை மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, அபாயகரமான வகையில் மோட்டார் சைக்கிள்களை இயக்குபவர்களுக்கும், வேகமாக வாகனங்கள் ஓட்டுவோருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உரிய விதிகளை வகுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உத்தரவு
இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி ராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.