நள்ளிரவில் திடீரென ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு போன பியூஷ் கோயல்! முக்கிய மீட்டிங்! என்ன நடந்தது
சென்னை: தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பரபரப்பான அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நள்ளிரவில் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழ்நாடு தேர்தல் களம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் 2, 3 மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா, மேற்கு வங்கம் உட்பட மொத்தம் 5 மாநிலங்களுக்குத் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காகவே பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்டக் கூட்டத்திற்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் என்டிஏ கூட்டணியில் இருக்கும் அனைத்துத் தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாகவே கூட்டணியை இறுதி செய்யவே பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேற்று தமிழகம் வந்தார்.
முதல் நாளான நேற்றே என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்தது. தனது நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பியூஷ் கோயலையும் டிடிவி தினகரன் நேரில் சந்தித்தார். அதேபோல பாமக தலைவர் அன்புமணியும் நேற்று மாலை பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சூழலில் தான் நேற்று நள்ளிரவில் எதிர்பார்க்காத ஒரு சந்திப்பு நடந்தது. ஆடிட்டர் குருமூர்த்தியை பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேரில் சந்தித்தார். மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்குச் சென்ற பியூஸ் கோயல் அவருடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு தேர்தல் களம் குறித்தும், கூட்டணி குறித்தும் இருவரும் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 1.40 மணி நேரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு பியூஷ் கோயல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆடிட்டர் குருமூர்த்தி வாசல் வரை வந்து அவரை வழியனுப்பி வைத்தார். தமிழக அரசியல் களத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வரும் சூழலில், நள்ளிரவில் நடந்த இந்தச் சந்திப்பு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications